Chapter 8

Sending messenger birds including to Thirunādu - (பொன் உலகு)

திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்
This segment is about sending emissaries to Bhagavān. Āzhvār sends various species of birds as his messengers. “When you meet Bhagavān, ask Him if what He is doing is on par with His nature” instructs parānkusa nāyaki to her emissaries in these hymns.
இது தூது விடும் பகுதி. ஆழ்வார் புள்ளினங்களை இதில் தூது விடுகிறார். “பகவானைப் பார்த்து, இச்செயல் உன் தகுதிக்கு ஏற்றதுதானா எனக் கேளுங்கள்” என்று கூறிப் பராங்குசநாயகி பறவைகளைத் தூது விடுதல்போல் ஈண்டுப் பாடல்கள் அமைந்துள்ளன.

ஆறாம் பத்து -எட்டாந் திருவாய்மொழி – “பொன்னுலகு”-பிரவேசம் + Read more
Verses: 3420 to 3430
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: குறிஞ்சி
Timing: NIGHT
Recital benefits: their hearts will melt for the god
  • TVM 6.8.1
    3420 ## பொன் உலகு ஆளீரோ * புவனி முழுது ஆளீரோ? *
    நல் நலப் புள்ளினங்காள் * வினையாட்டியேன் நான் இரந்தேன் **
    முன் உலகங்கள் எல்லாம் படைத்த * முகில்வண்ணன் கண்ணன் *
    என் நலம் கொண்ட பிரான் தனக்கு * என் நிலைமை உரைத்தே. (1)
  • TVM 6.8.2
    3421 மை அமர் வாள் நெடும் கண் * மங்கைமார் முன்பு என் கை இருந்து *
    நெய் அமர் இன் அடிசில் * நிச்சல் பாலொடு மேவீரோ **
    கை அமர் சக்கரத்து * என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு *
    மெய் அமர் காதல் சொல்லிக் * கிளிகாள் விரைந்து ஓடிவந்தே (2)
  • TVM 6.8.3
    3422 ஓடிவந்து என் குழல்மேல் * ஒளி மா மலர் ஊதீரோ *
    கூடிய வண்டினங்காள் * குருநாடு உடை ஐவர்கட்கு ஆய் **
    ஆடிய மா நெடும் தேர்ப்படை * நீறு எழச் செற்ற பிரான் *
    சூடிய தண் துளவம் உண்ட * தூ மது வாய்கள் கொண்டே (3)
  • TVM 6.8.4
    3423 தூ மது வாய்கள் கொண்டுவந்து * என் முல்லைகள்மேல் தும்பிகாள் *
    பூ மது உண்ணச் செல்லில் * வினையேனைப் பொய்செய்து அகன்ற **
    மா மது வார் தண் துழாய் முடி * வானவர் கோனைக் கண்டு *
    யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும் * கண்டீர் நுங்கட்கே? (4)
  • TVM 6.8.5
    3424 நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் * யான் வளர்த்த கிளிகாள் *
    வெம் கண் புள் ஊர்ந்து வந்து * வினையேனை நெஞ்சம் கவர்ந்த **
    செங்கண் கருமுகிலைச் * செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை *
    எங்குச் சென்றாகிலும் கண்டு * இதுவோ தக்கவாறு? என்மினே (5)
  • TVM 6.8.6
    3425 என் மின்னு நூல் மார்வன் * என் கரும் பெருமான் என் கண்ணன் *
    தன் மன்னு நீள் கழல்மேல் * தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் **
    கல்மின்கள் என்று உம்மை யான் * கற்பியாவைத்த மாற்றம்சொல்லி *
    செல்மின்கள் தீவினையேன் * வளர்த்த சிறு பூவைகளே (6)
  • TVM 6.8.7
    3426 பூவைகள் போல் நிறத்தன் * புண்டரீகங்கள் போலும் கண்ணன் *
    யாவையும் யாவரும் ஆய் * நின்ற மாயன் என் ஆழிப் பிரான் **
    மாவை வல் வாய் பிளந்த * மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி *
    பாவைகள் தீர்க்கிற்றிரே * வினையாட்டியேன் பாசறவே? (7)
  • TVM 6.8.8
    3427 பாசறவு எய்தி இன்னே * வினையேன் எனை ஊழி நைவேன் *
    ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே * அருள்செய்து ஒருநாள் **
    மாசு அறு நீலச் சுடர் முடி * வானவர் கோனைக் கண்டு *
    ஏசு அறும் நும்மை அல்லால் * மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே (8)
  • TVM 6.8.9
    3428 பேர்த்து மற்று ஓர் களைகண் * வினையாட்டியேன் நான் ஒன்று இலேன் *
    நீர்த் திரைமேல் உலவி * இரை தேரும் புதா இனங்காள் **
    கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் * விண்ணவர் கோனைக் கண்டு *
    வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் * வைகல் வந்திருந்தே (9)
  • TVM 6.8.10
    3429 வந்திருந்து உம்முடைய * மணிச் சேவலும் நீரும் எல்லாம் *
    அந்தரம் ஒன்றும் இன்றி * அலர்மேல் அசையும் அன்னங்காள் **
    என் திரு மார்வற்கு என்னை * இன்னவாறு இவள் காண்மின் என்று *
    மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் * மறுமாற்றங்களே (10)
  • TVM 6.8.11
    3430 ## மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு * மதுசூத பிரான் அடிமேல் *
    நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
    தோற்றங்கள் ஆயிரத்துள் * இவையும் ஒருபத்தும் வல்லார் *
    ஊற்றின்கண் நுண் மணல் போல் * உருகாநிற்பர் நீராயே (11)