Your browser does not support the audio element.
audio
3409 உண்ணுஞ்சோறுபருகுநீர் தின்னும்வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் * எம்பெருமான்னென்றென்றே கண்கள்நீர்மல்கி *
மண்ணினுளவன்சீர் வளம்மிக்கவனூர்வினவி *
திண்ணம்என்னிளமான்புகுமூர் திருக்கோளூரே. (2)
3410 ஊரும்நாடுமுலகும் தன்னைப்போல் * அவனுடைய
பேரும்தார்களுமேபிதற்றக் கற்புவானிடறி *
சேருநல்வளஞ்சேர் பழனத்திருகோளூர்க்கே *
போருங்கொல்? உரையீர் கொடியேன்கொடிபூவைகளே!
3411 பூவைபைங்கிளிகள் பந்துதூதைபூம்புட்டில்கள் *
யாவையும்திருமால் திருநாமங்களேகூவியெழும் * என்
பாவைபோயினித் தண்பழனத்திருக்கோளூர்க்கே *
கோவைவாய்துடிப்ப மழைக்கண்ணொடென் செய்யுங்கொலோ?
3412 கொல்லையென்பர்கொலோ? குணம்மிக்கன ளென்பர்கொலோ? *
சில்லைவாய்ப்பெண்டுகள் அயற்சேரியுள்ளாருமெல்லே! *
செல்வம்மல்கியவன்கிடந்த திருக்கோளூர்க்கே *
மெல்லிடை நுடங்க இளமான்செல்லமேவினளே.
3413 மேவிநைந்து நைந்துவிளையாடலுறாள் என்சிறுத்
தேவிபோய் * இனித்தன்திருமால் திருக்கோளூரில் *
பூவியல்பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு *
ஆவியுள்குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?
3414 இன்று எனக்கு உதவாதகன்ற இளமான் இனிப்போய் *
தென்திசைத்திலதமனைய திருக்கோளூர்க்கே
சென்று * தன்திருமால் திருக்கண்ணும்செவ்வாயும் கண்டு *
நின்றுநின்றுநையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.
3415 மல்குநீர்கண்ணொடு மையலுற்றமனத்தனளாய் *
அல்லுநன்பகலும் நெடுமாலென்றழைத்து, இனிப்போய் *
ஒல்கியொல்கிநடந்து எங்ஙனேபுகுங்கொல்ஒசிந்தே?
3416 ஒசிந்தநுண்ணிடைமேல் கையைவைத்துநொந்துநொந்து *
கசிந்தநெஞ்சினளாய்க் கண்ணநீர்துளும்பச்செல்லுங்கொல் *
ஒசிந்தவொண்மலராள்கொழுநன் திருக்கோளூர்க்கே *
கசிந்தநெஞ்சினளாய் எம்மைநீத்தஎம்காரிகையே.
3417 காரியம்நல்லனகளவைகாணில் என்கண்ணனுக்கென்று *
ஈரியாயிருப்பாள் இதெல்லாம்கிடக்க, இனிப்போய் *
சேரிபல்பழிதூயிரைப்பத் திருக்கோளூர்க்கே *
நேரிழைநடந்தாள் எம்மையொன்றும்நினைத்திலளே.
3418 நினைக்கிலேன்தெய்வங்காள்! நெடுங்கணிளமான் இனிப்போய் *
அனைத்துலகுமுடைய அரவிந்தலோசனனை *
தினைத்தனையும்விடாள் அவன்சேர்திருக்கோளூர்க்கே *
மனைக்குவான்பழியும்நினையாள் செல்லவைத்தனளே.
3419 வைத்தமாநிதியாம் மதுசூதனையேயலற்றி *
கொத்தலர்பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
பத்துநூற்றுள்இப்பத்து அவன்சேர்திருக்கோளூர்க்கே *
சித்தம்வைத்துரைப்பார் திகழ்பொன் னுலகாள்வாரே. (2)