Your browser does not support the audio element.
audio
3068 செய்யதாமரைக்கண்ணனாய் உலகேழுமுண்ட அவன் கண்டீர் *
வையம்வானம்மனிசர்தெய்வம் மற்றும்மற்றும்மற்றும் முற்றுமாய் *
செய்யசூழ்சுடர்ஞானமாய் வெளிப்பட்டிவைபடைத்தான் * பின்னும்
மொய்கொள்சோதியோடாயினான் ஒருமூவராகிய மூர்த்தியே. (2)
3069 மூவராகியமூர்த்தியை முதல்மூவர்க்கும்முதல்வன்தன்னை *
சாவமுள்ளனநீக்குவானைத் தடங்கடற்கிடந்தான்தன்னை *
தேவதேவனைத் தென்னிலங்கையெரியெழச்செற்றவில்லியை *
பாவநாசனைப் பங்கயத்தடங்கண்ணனைப் பரவுமினோ.
3070 பரவிவானவரேத்தநின்ற பரமனைப்பரஞ்சோதியை *
குரவைகோத்தகுழகனை மணிவண்ணனைக்குடக்கூத்தனை *
அரவமேறியலைகடலமரும் துயில்கொண்டஅண்ணலை *
இரவும்நன்பகலும்விடாது என்றுமேத்துதல்மனம் வைம்மினோ.
3071 வைம்மின்நும்மனத்தென்று யானுரைக்கின்றமாயவன் சீர்மையை *
எம்மனோர்களுரைப்பதென்? அதுநிற்கநாடொறும் * வானவர்
தம்மையாளுமவனும் நான்முகனும்சடைமுடியண்ணலும் *
செம்மையாலவன்பாதபங்கயம் சிந்தித்தேத்தித்திரிவரே.
3072 திரியுங்காற்றோடகல்விசும்பு திணிந்தமண்கிடந்தகடல் *
எரியும்தீயோடிருசுடர்தெய்வம் மற்றும்மற்றும் முற்றுமாய் *
கரியமேனியன்செய்யதாமரைக்கண்ணன் கண்ணன் விண்ணோரிறை *
சுரியும்பல்கருங்குஞ்சி எங்கள்சுடர்முடியண்ணல் தோற்றமே.
3073 தோற்றக்கேடவையில்லவனுடையான் அவனொருமூர்த்தியாய் *
சீற்றத்தோடருள்பெற்றவனடிக்கீழ்ப் புகநின்ற செங்கண்மால் *
நாற்றத்தோற்றச்சுவையொலி உறலாகிநின்ற * எம்வானவ
ரேற்றையேயன்றி மற்றொருவரையானிலே னெழுமைக்குமே.
3074 எழுமைக்குமெனதாவிக்கு இன்னமுதத்தினை எனதாருயிர் *
கெழுமியகதிர்ச்சோதியை மணிவண்ணனைக் குடக்கூத்தனை *
விழுமியவமரர்முனிவர்விழுங்கும் கன்னற்கனியினை *
தொழுமின்தூயமனத்தராய் இறையும்நில்லா துயரங்களே.
3075 துயரமேதருதுன்பவின்பவினைகளாய் அவையல்லனாய் *
உயரநின்றதோர்சோதியாய் உலகேழுமுண்டுமிழ்ந்தான் தன்னை *
அயரவாங்குநமன்தமர்க்கு அருநஞ்சினையச்சுதன்தன்னை *
தயரதற்குமகன்தன்னையன்றி மற்றிலேன்தஞ்சமாகவே. (2)
3076 தஞ்சமாகியதந்தைதாயொடு தானுமாய்அவையல்லனாய் *
எஞ்சலிலமரர்குலமுதல் மூவர்தம்முள்ளுமாதியை *
அஞ்சிநீருலகத்துள்ளீர்கள் அவனிவனென்றுகூழேன்மின் *
நெஞ்சினால்நினைப்பான்யவன் அவனாகும்நீள்கடல் வண்ணனே.
3077 கடல்வண்ணன்கண்ணன் விண்ணவர்கருமாணிக்கமெனதாருயிர் *
படவரவினணைக்கிடந்த பரஞ்சுடர், பண்டுநூற்றுவர் *
அடவரும்படைமங்க ஐவர்கட்காகிவெஞ்சமத்து * அன்றுதேர்
கடவியபெருமான் கனைகழல்காண்பதென்றுகொல் கண்களே?
3078 கண்கள்காண்டற்கரியனாய்க் கருத்துக்குநன்று மெளியனாய் *
மண்கொள்ஞாலத்துயிர்க்கெல்லாம் அருள்செய்யும் வானவரீசனை *
பண்கொள்சோலைவழுதிநாடன் குருகைக்கோன் சடகோபன்சொல் *
பண்கொளாயிரத்திப்பத்தால் பத்தராகக்கூடும் பயிலுமினே. (2)