Your browser does not support the audio element.
audio
3057 மொய்ம்மாம்பூம்பொழில்பொய்கை முதலைச் சிறைப்பட்டுநின்ற *
கைம்மாவுக்கருள்செய்த கார்முகில்போல்வண்ணன் கண்ணன் *
எம்மானைச்சொல்லிப்பாடி எழுந்தும்பரந்தும்துள்ளாதார்
தம்மால் * கருமமென்? சொல்லீர் தண்கடல்வட்டத்துள்ளீரே? (2)
3058 தண்கடல்வட்டத்துள்ளாரைத் தமக்கிரையாத்தடிந்துண்ணும் *
திண்கழற்காலசுரர்க்குத் தீங்கிழைக்கும்திருமாலை *
பண்கள்தலைக்கொள்ளப்பாடிப் பறந்தும் குனித்துழலாதார் *
மண்கொளுலகிற்பிறப்பார் வல்வினைமோதமலைந்தே
3059 மலையைஎடுத்துக்கல்மாரிகாத்துப் பசுநிரைதன்னை *
தொலைவுதவிர்த்தபிரானைச் சொல்லிச்சொல்லி நின்றெப்போதும் *
தலையினோடாதனந்தட்டத் தடுகுட்டமாய்ப்பறவாதார் *
அலைகொள்நரகத்தழுந்திக் கிடந்துழைக்கின்றவம்பரே.
3060 வம்பவிழ்கோதைபொருட்டா மால்விடையேழுமடர்த்த *
செம்பவளத்திரள்வாயன் சிரீதரன்தொல்புகழ்பாடி *
கும்பிடுநட்டமிட்டாடிக் கோகுகட்டுண்டுழலாதார் *
தம்பிறப்பால்பயனென்னே? சாதுசனங்களிடையே.
3061 சாதுசனத்தைநலியும் கஞ்சனைச்சாதிப்பதற்கு *
ஆதியஞ்சோதியுருவை அங்குவைத்திங்குப்பிறந்த *
வேதமுதல்வனைப்பாடி வீதிகள்தோறும்துள்ளாதார் *
ஓதியுணர்ந்தவர்முன்னா என்சவிப்பார்மனிசரே?
3062 மனிசரும்மற்றும்முற்றுமாய் மாயப்பிறவிபிறந்த *
தனியன்பிறப்பிலிதன்னைத் தடங்கடல்சேர்ந்தபிரானை *
கனியைக்கரும்பினின்சாற்றைக் கட்டியைத்தேனை யமுதை *
முனிவின்றியேத்திக்குனிப்பார் முழுதுணர் நீர்மையினாரே.
3063 நீர்மையில்நூற்றுவர்வீய ஐவர்க்கருள்செய்துநின்று *
பார்மல்குசேனையவித்த பரஞ்சுடரைநினைந்தாடி *
நீர்மல்குகண்ணினராகி நெஞ்சங்குழைந்துநையாதே *
ஊன்மல்கிமோடுபருப்பார் உத்தமர்கட்கென் செய்வாரே?
3064 வார்புனலந்தணருவி வடதிருவேங்கடத்தெந்தை *
பேர்பலசொல்லிப்பிதற்றிப் பித்தரென்றேபிறர்கூற *
ஊர்பலபுக்கும்புகாதும் உலோகர்சிரிக்கநின்றாடி *
ஆர்வம்பெருகிக்குனிப்பார் அமரர்தொழப்படுவாரே.
3065 அமரர்தொழப்படுவானை அனைத்துலகுக்கும்பிரானை *
அமரமனத்தினுள்யோகுபுணர்ந்து அவன் தன்னோடொன்றாக *
அமரத்துணியவல்லார்களொழிய அல்லாதவரெல்லாம் *
அமரநினைந்தெழுந்தாடி அலற்றுவதேகருமமே.
3066 கருமமும்கருமபலனுமாகிய காரணன்தன்னை *
திருமணிவண்ணனைச்செங்கண்மாலினைத் தேவபிரானை *
ஒருமைமனத்தினுள்வைத்து உள்ளங்குழைந்தெழுந்தாடி *
பெருமையும்நாணும்தவிர்ந்து பிதற்றுமின்பேதமை தீர்ந்தே.
3067 தீர்ந்தவடியவர்தம்மைத் திருத்திப்பணிகொள்ளவல்ல *
ஆர்ந்தபுகழச்சுதனை அமரர்பிரானையெம்மானை *
வாய்ந்தவளவயல்சூழ் தண்வளங்குருகூர்ச்சடகோபன் *
நேர்ந்தவோராயிரத்திப்பத்து அருவினைநீறுசெய்யுமே. (2)