Your browser does not support the audio element.
audio
2967 கேசவன்தமர் கீழ்மேலெமரேழெழுபிறப்பும் *
மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா! *
ஈசனென்கருமாணிக்கமென்செங்கோலக்கண்ணன் விண்ணோர்
நாயகன் * எம்பிரானெம்மான் நாராயணனாலே. (2)
2968 நாரணன் முழுவேழுலகுக்கும்நாதன் வேதமயன் *
காரணம்கிரிசை கருமமிவை முதல்வனெந்தை *
சீரணங்கமரர்பிறர்பலரும் தொழுதேத்தநின்று *
வாரணத்தைமருப்பொசித்தபிரான் என்மாதவனே.
2969 மாதவனென்றதேகொண்டு என்னையினியிப்பாற்பட்டது *
யாதவங்களும்சேர்கொடேனென்று என்னுள்புகுந்திருந்து *
தீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கண்குன்றம் *
கோதவமிலென்கன்னற்கட்டிஎம்மானென்கோவிந்தனே.
2970 கோவிந்தன் குடக்கூத்தன் கோவலனென்றென்றே குனித்து *
தேவும்தன்னையும் பாடியாடத்திருத்தி * என்னைக்கொண்டுஎன்
பாவந்தன்னையும்பாறக்கைத்து எமரேழெழுபிறப்பும் *
மேவும்தன்மையமாக்கினான் வல்லனெம்பிரான்விட்டுவே.
2971 விட்டிலங்குசெஞ்சோதித் தாமரைபாதம்கைகள்கண்கள் *
விட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு *
விட்டிலங்குமதியம்சீர்சங்கு சக்கரம்பரிதி *
விட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே.
2972 மதுசூதனையன்றிமற்றிலேனென்று எத்தாலும்கருமமின்றி *
துதிசூழ்ந்தபாடல்கள்பாடியாட நின்றூழியூழிதொறும் *
எதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்பும் எனக்கேயருள்கள் செய்ய *
விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே.
2973 திரிவிக்கிரமன்செந்தாமரைக்கண் எம்மானென் செங்கனிவாய் *
உருவிற்பொலிந்தவெள்ளைப்பளிங்கு நிறத்தனனென் றென்று * உள்ளிப்
பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே *
மருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென் வாமனனே!
2974 வாமனன்! என்மரதகவண்ணன்! தாமரைக்கண்ணினன்!
காமனைப்பயந்தாய்! * என்றென்று உன்கழல்பாடியே பணிந்து
தூமனத்தனனாய்ப் பிறவித்துழதிநீங்க * என்னைத்
தீமனங்கெடுத்தாய் உனக்கென்செய்கேன்? என்சிரீதரனே!
2975 சிரீதரன்செய்யதாமரைக்கண்ணன் என்றென்றிராப் பகல்வாய்
வெரீஇ * அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து *
மரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல்
இரீஇ * உன்னையென்னுள்வைத்தனை என்னிருடீகேசனே!
2976 இருடீகேசனெம்பிரான் இலங்கையரக்கர்குலம் *
முருடுதீர்த்தபிரான்எம்மான் அமரர்பெம்மா னென்றென்று *
தெருடியாகில்நெஞ்சே! வணங்கு திண்ணமறியறிந்து *
மருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே.
2977 பற்பநாபன்உயர்வறவுயரும் பெருந்திறலோன் *
எற்பரன்என்னையாக்கிக்கொண்டு எனக்கேதன்னைத்தந்த
கற்பகம் * என்னமுதம்கார்முகில்போலும் வேங்கடநல்
வெற்பன் * விசும்போர்பிரான் எந்தைதாமோதரனே.
2978 தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை *
ஆமோதரமறிய ஒருவர்க்கென்றெதொழுமவர்கள் *
தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும் *
ஆமோதரமறிய எம்மானைஎன்னாழிவண்ணனையே.
2979 வண்ணமாமணிச்சோதியை அமரர்தலைமகனை *
கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன் *
பண்ணியதமிழ்மாலை ஆயிரத்துள்ளிவைபன்னிரண்டும் *
பண்ணிற்பன்னிருநாமப்பாட்டு அண்ணல்தாளணைவிக்குமே. (2)