Your browser does not support the audio element.
audio
2980 அணைவதரவணைமேல் பூம்பாவையாகம்
புணர்வது * இருவரவர்முதலும் தானே *
இணைவனாமெப்பொருட்கும், வீடுமுதலாம் *
புணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே. (2)
2981 நீந்தும்துயர்ப்பிறவி உட்படமற்றெவ்வெவையும் *
நீந்தும்துயரில்லா வீடுமுதலாம் *
பூந்தண்புனற்பொய்கை யானையிடர்கடிந்த *
பூந்தண்துழாய் என்தனிநாயகன்புணர்ப்பே.
2982 புணர்க்குமயனாம் அழிக்குமரனாம் *
புணர்த்ததன்னுந்தியோடு ஆகத்துமன்னி *
புணர்த்ததிருவாகித் தன்மார்வில்தான்சேர் *
புணர்ப்பன் பெரும்புணர்ப்பு எங்கும்புலனே.
2983 புலனைந்துமேயும் பொறியைந்தும்நீக்கி *
நலமந்தமில்லது ஓர்நாடுபுகுவீர் *
அலமந்துவீய அசுரரைச் செற்றான் *
பலமுந்துசீரில் படிமினோவாதே.
2984 ஒவாத்துயர்ப்பிறவி உட்பட மற்றெவ்வெவையும் *
மூவாத்தனிமுதலாய் மூவுலகும் காவலோன் *
மாவாகி ஆமையாய் மீனாகிமானிடமாம் *
தேவாதிதேவபெருமான் என்தீர்த்தனே.
2985 தீர்த்தனுலகளந்த சேவடிமேல்பூந்தாமம்
சேர்த்தியவையே * சிவன்முடிமேல்தான்கண்டு *
பார்த்தன்தெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை *
பேர்த்துமொருவரால் பேசக்கிடந்ததே?
2986 கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்
கிடந்திடும் * தன்னுள் கரக்கும் உமிழும் *
தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை * மால்செய்கின்றமால் ஆர்காண்பாரே?
2987 காண்பாரார்? எம்மீசன் கண்ணனையென்காணுமாறு? *
ஊண்பேசில் எல்லாவுலகுமோர்துற்றாற்றா *
சேண்பாலவீடோ உயிரோமற்றெப்பொருட்கும் *
ஏண்பாலும்சோரான்பரந்துளனாமெங்குமே.
2988 எங்கும்முளன் கண்ணனென்றமகனைக்காய்ந்து *
இங்கில்லையாலென்று இரணியன் தூண்புடைப்ப *
அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய * என்
சிங்கப்பிரான் பெருமை ஆராயும்சீர்மைத்தே?
2989 சீர்மைகொள்வீடு சுவர்க்கம்நரகீறா *
ஈர்மைகொள்தேவர்நடுவா மற்றெப்பொருட்கும் *
வேர்முதலாய்வித்தாய்ப் பரந்துதனிநின்ற *
கார்முகில்போல்வண்ணன் என்கண்ணனைநான் கண்டேனே.
2990 கண்தலங்கள் செய்ய கருமேனியம்மானை *
வண்டலம்பும்சோலை வழுதிவளநாடன் *
பண்தலையிற்சொன்னதமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் *
விண்தலையில்வீற்றிருந்தாள்வர் எம்மாவீடே. (2)