Your browser does not support the audio element.
audio
3849 செங்சொற்கவிகாள்! உயிர்காத்தாட்செய்மின் திருமாலிருஞ்சோலை *
வஞ்சக்கள்வன்மாமாயன் மாயக்கவியாய்வந்து * என்
நெஞ்சுமுயிருமுள்கலந்து நின்றாரறியாவண்ணம் * என்
நெஞ்சுமுயிருமவையுண்டு தானேயாகிநிறைந்தானே. (2)
3850 தானேயாகிநிறைந்து எல்லாவுலகுமுயிரும்தானேயாய் *
தானேயானென்பானாகித் தன்னைத்தானேதுதித்து * எனக்குத்
தேனேபாலேகன்னலேயமுதே திருமாலிருஞ்சோலை *
கோனேயாகிநின்றொழிந்தான் என்னைமுற்று முயிருண்டே.
3851 என்னைமுற்றுமுயிருண்டு என்மாயவாக்கையிதனுள்புக்கு *
என்னைமுற்றும்தானேயாய் நின்றமாயஅம்மான்சேர் *
தென்னன்திருமாலிருஞ்சோலைத் திசைகைகூப்பிச் சேர்ந்தயான் *
இன்னும்போவேனேகொலோ? எங்கொலம்மான் திருவருளே?
3852 என்கொல்அம்மான்திருவருள்கள்? உலகுமுயிரும் தானேயாய் *
நன்கென்னுடலம்கைவிடான் ஞாலத்தூடேநடந்துழக்கி *
தென்கொள்திசைக்குத்திலதமாய்நின்ற திருமாலிருஞ்சோலை *
நங்கள்குன்றம்கைவிடான் நண்ணாஅசுரர்நலியவே.
3853 நண்ணாவசுரர்நலிவெய்த நல்லவமரர்பொலிவெய்த *
எண்ணாதனகளெண்ணும் நன்முனிவரின்பம்தலைசிறப்ப *
பண்ணார்பாடலின்கவிகள் யானாய்த்தன்னைத்தான்பாடி *
தென்னாவென்னும்என்னம்மான் திருமாலிருஞ் சோலையானே.
3854 திருமாலிருஞ்சோலையானேயாகிச் செழுமூவுலகும் * தன்
ஒருமாவயிற்றினுள்ளேவைத்து ஊழியூழிதலையளிக்கும் *
திருமாலென்னையாளுமால் சிவனும்பிரமனும்காணாது *
அருமாலெய்தியடிபரவ அருளையீந்தவம்மானே.
3855 அருளையீயென்னம்மானே! என்னும்முக்கணம்மானும் *
தெருள்கொள்பிரமனம்மானும் தேவர்கோனும்தேவரும் *
இருள்கள்கடியும்முனிவரும் ஏத்துமம்மான்திருமலை *
மருள்கள்கடியும்மணிமலை திருமாலிருஞ்சோலைமலையே.
3856 திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற்கடலே என்தலையே *
திருமால்வைகுந்தமே தண்திருவேங்கடமேஎனதுடலே *
அருமாமாயத்தெனதுயிரே மனமேவாக்கேகருமமே *
ஒருமாநொடியும்பிரியான் என்ஊழிமுதல்வனொருவனே. (2)
3857 ஊழிமுதல்வனொருவனேயென்னும் ஒருவன் உலகெல்லாம் *
ஊழிதோறும்தன்னுள்ளேபடைத்துக்காத்துக் கெடுத்துழலும் *
ஆழிவண்ணனென்னம்மான் அந்தண்திருமாலிருஞ்சோலை *
வாழிமனமே! கைவிடேல் உடலுமுயிரும்மங்கவொட்டே.
3858 மங்கவொட்டுஉன்மாமாயை திருமாலிருஞ்சோலைமேய *
நங்கள்கோனே! யானேநீயாகி என்னையளித்தானே! *
பொங்கைம்புலனும்பொறியைந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம் *
இங்கிவ்வுயிரேய்பிரகிருதி மானாங்காரமனங்களே.
3859 மானாங்காரமனம்கெட ஐவர்வன்கையர்மங்க *
தானாங்காரமாய்ப்புக்குத் தானேதானேயானானை *
தேனாங்காரப்பொழில்குருகூர்ச் சடகோபன்சொல்லாயிரத்துள் *
மானாங்காரத்திவைபத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே. (2)