Your browser does not support the audio element.
audio
3794 கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்ன * நாளும்
கொடுவினைசெய்யும் கூற்றின்தமர்களும்குறுககில்லார் *
விடமுடையரவில் பள்ளிவிரும்பினான்சுரும்பலற்றும் *
தடமுடைவயல் அனந்தபுரநகர்ப்புகுதும்இன்றே. (2)
3795 இன்றுபோய்ப்புகுதிராகில் எழுமையும் ஏதம்சார *
குன்றுநேர்மாடமாடே குருந்துசேர்செருந்திபுன்னை *
மன்றலர்போழில் அனந்தபுரநகர்மாயன்நாமம் *
ஒன்றுமோராயிரமாம் உள்ளுவார்க்கும்பரூரே.
3796 ஊரும்புட்கொடியுமஃதே உலகெல்லாமுண்டுமிழ்ந்தான் *
சேரும்தண்ணனந்தபுரம் சிக்கெனப்புகுதிராகில் *
தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணம்நாம்அறியச் சொன்னோம் *
பேருமோராயிரத்துள் ஒன்றுநீர்பேசுமினே.
3797 பேசுமின்கூசமின்றிப் பெரியநீர்வேலைசூழ்ந்து *
வாசமேகமழுஞ்சோலை வயலணியனந்தபுரம் *
நேசம்செய்துறைகின்றானை நெறிமையால்மலர்கள்தூவி *
பூசனைசெய்கின்றார்கள் புண்ணியம்செய்தவாறே!
3798 புண்ணியஞ்செய்து நல்லபுனலொடுமலர்கள்தூவி *
எண்ணுமின்எந்தைநாமம் இப்பிறப்பறுக்கும்அப்பால் *
திண்ணம்நாமறியச்சொன்னோம் செறிபொழிலனந்தபுரத்து *
அண்ணலார்கமலபாதம் அணுகுவார்அமரராவார்.
3799 அமரராய்த்திரிகின்றார்கட்கு ஆதிசேரனந்தபுரத்து *
அமரர்கோனர்ச்சிக்கின்று அங்ககப்பணிசெய்வர் விண்ணோர் *
நமர்களோ! சொல்லக்கேண்மின் நாமும்போய்நணுக வேண்டும் *
குமரனார்தாதைதுன்பம்துடைத்த கோவிந்தனாரே.
3800 துடைத்தகோவிந்தனாரே உலகுயிர்தேவும்மற்றும் *
படைத்தஎம்பரமமூர்த்தி பாம்பணைப்பள்ளிகொண்டான் *
மடைத்தலைவாளைபாயும் வயலணியனந்தபுரம் *
கடைத்தலைசீய்க்கப்பெற்றால் கடுவினைகளையலாமே.
3801 கடுவினைகளையலாகும் காமனைப்பயந்தகாளை *
இடவகைகொண்டதென்பர் எழிலணியனந்தபுரம் *
படமுடையரவில் பள்ளிபயின்றவன்பாதம்காண *
நடமினோநமர்களுள்ளீர்! நாமுமக்கறியச்சொன்னோம்.
3802 நாமுமக்கறியச்சொன்ன நாள்களும்நணியவான *
சேமம்நன்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம் *
தூமநல்விரைமலர்கள் துவளறஆய்ந்துகொண்டு *
வாமனனடிக்கென்றேத்த மாய்ந்தறும்வினைகள்தாமே.
3803 மாய்ந்தறும்வினைகள்தாமே மாதவா! என்ன * நாளும்
ஏய்ந்தபொன்மதிள் அனந்தபுரநகரெந்தைக்கென்று *
சாந்தொடுவிளக்கம்தூபம் தாமரைமலர்கள்நல்ல *
ஆய்ந்துகொண்டேத்தவல்லார் அந்தமில்புகழினாரே.
3804 அந்தமில்புகழ் அனந்தபுரநகராதிதன்னை *
கொந்தலர்பொழில் குருகூர்மாறன்சொல்லாயிரத்துள் *
ஐந்தினோடைந்தும்வல்லார் அணைவர்போயமருலகில் *
பைந்தொடிமடந்தையர்தம் வேய்மருதோளிணையே. (2)