Your browser does not support the audio element.
audio
1728 கைம்மானமதயானை இடர்தீர்த்தகருமுகிலை *
மைம்மானமணியை அணிகொள்மரதகத்தை *
எம்மானைஎம்பிரானைஈசனை என்மனத்துள்
அம்மானை * அடியேன்அடைந்துய்ந்துபோனேனே. (2)
1729 தருமானமழைமுகிலைப் பிரியாதுதன்னடைந்தார் *
வருமானம்தவிர்க்கும் மணியை, அணியுருவில் *
திருமாலைஅம்மானை அமுதத்தைக் கடல்கிடந்த
பெருமானை * அடியேன் அடைந்துய்ந்துபிழைத்தேனே.
1730 விடையேழன்றடர்த்து வெகுண்டுவிலங்கலுற *
படையால்ஆழிதட்ட பரமன்பரஞ்சோதி *
மடையார்நீலம்மல்கும்வயல்சூழ் கண்ணபுரமொன்று
உடையானுக்கு * அடியேன் ஒருவர்க்குரியேனோ? (2)
1731 மிக்கானை மறையாய்விரிந்தவிளக்கை * என்னுள்
புக்கானைப் புகழ்சேர்பொலிகின்றபொன்மலையை *
தக்கானைக் கடிகைத்தடங்குன்றின்மிசையிருந்த *
அக்காரக்கனியை அடைந்துய்ந்துபோனேனே. (2)
1732 வந்தாய்என்மனத்தே வந்துநீபுகுந்தபின்னை *
எந்தாய்! போயறியாய் இதுவேஅமையாதோ? *
கொந்தார்பைம்பொழில்சூழ் குடந்தைக்கிடந்துகந்த
மைந்தா! * உன்னைஎன்றும் மறவாமைப்பெற்றேனே.
1733 எஞ்சாவெந்நரகத்து அழுந்திநடுங்குகின்றேற்கு *
அஞ்சேலென்றுஅடியேனை ஆட்கொள்ளவல்லானை *
நெஞ்சே! நீநினையாது இறைப்பொழுதும்இருத்தி கண்டாய் *
மஞ்சார்மாளிகைசூழ் வயலாலிமைந்தனையே.
1734 பெற்றார்பெற்றொழிந்தார் பின்னும்நின்று அடியேனுக்கு *
உற்றானாய்வளர்த்து என்னுயிராகிநின்றானை *
முற்றாமாமதிகோள் விடுத்தானைஎம்மானை *
எத்தால்யான்மறக்கேன்? இதுசொல்என்ஏழைநெஞ்சே!
1735 கற்றார்பற்றறுக்கும் பிறவிப்பெருங்கடலே *
பற்றாவந்துஅடியேன் பிறந்தேன், பிறந்தபின்னை *
வற்றாநீர்வயல்சூழ் வயலாலியம்மானைப்
பெற்றேன் * பெற்றதும் பிறவாமைபெற்றேனே.
1736 கண்ணார்கண்ணபுரம் கடிகைகடிகமழும் *
தண்ணார்தாமரைசூழ் தலைச்சங்கமேல்திசையுள் *
விண்ணோர்நாண்மதியை விரிகின்றவெஞ்சுடரை *
கண்ணாரக்கண்டுகொண்டு களிக்கின்றதுஇங்குஎன்றுகொலோ. (2)
1737 செருநீர்வேல்வலவன் கலிகன்றிமங்கையர்கோன் *
கருநீர்முகில்வண்ணன் கண்ணபுரத்தானை *
இருநீரின்தமிழ் இன்னிசைமாலைகள்கொண்டுதொண்டீர்! *
வருநீர்வையம்உய்ய இவைபாடியாடுமினே. (2)