Chapter 5

Thirukkadalmallai 1 - (பார்-ஆயது உண்டு)

திருக்கடல்மல்லை -1
Thirukkadalmallai 1 - (பார்-ஆயது உண்டு)
Thirukkadalmallai is the name given to Mamallapuram. In this village, the Lord is reclining on the ground, hence He is known by the name Sthalasayana Perumal. There was a sage named Pundarika. The Lord desired to wear the flower that Pundarika brought with devotion. Therefore, leaving the Adisesha bed in the milky ocean, He came here and reclined on + Read more
மாமல்லபுரத்திற்குத் திருக்கடல்மல்லை என்று பெயர். இவ்வூரில் பகவான் தரையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். அதனால் அவருக்கு ஸ்தலசாயீ என்று திருநாமம். புண்டரீகர் என்ற மகரீஷி ஒருவர் இருந்தார். அவர் பக்தியோடு கொண்டு வந்த மலரை அணிந்துகொள்ள பகவான் விரும்பினான். அதனால் பாற்கடலில் பாம்பணையை விட்டு இங்கு வந்து கடற்கரையில் பள்ளி கொண்டான். அடியார்களிடம் அன்பு கொண்டவனன்றோ அவன்! உத்ஸவருக்கு உலகுய்ய நின்றான் என்று திருநாமம்.
Verses: 1088 to 1097
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: சீகாமரம்
Recital benefits: Will not get affected by the results of karma
  • PT 2.5.1
    1088 ## பார் ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணைப் * படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை *
    எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே * முளைத்து எழுந்த தீம் கரும்பினை **
    போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை * புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை *
    கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக் * கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே 1
  • PT 2.5.2
    1089 ## பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டுப் * பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி
    மாண்டு * அவத்தம் போகாதே வம்மின் * எந்தை என் வணங்கப்படுவானை ** கணங்கள் ஏத்தும்
    நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை * நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலை *
    காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக் * கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே 2
  • PT 2.5.3
    1090 உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய் * உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி *
    விடம் பருகு வித்தகனைக் கன்று மேய்த்து * விளையாட வல்லானை வரைமீ கானில் **
    தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில் * தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும் *
    கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன் * கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே 3
  • PT 2.5.4
    1091 பேய்த் தாயை முலை உண்ட பிள்ளை தன்னைப் * பிணை மருப்பின் கருங் களிற்றை பிணை மான் நோக்கின் *
    ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை * அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே
    கோத்தானை ** குடம் ஆடு கூத்தன் தன்னைக் * கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக்
    காத்தானை * எம்மானைக் கண்டுகொண்டேன் * கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே 4
  • PT 2.5.5
    1092 பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழப் * பாலகன் ஆய் ஆல் இலையில் பள்ளி இன்பம்
    ஏய்ந்தானை * இலங்கு ஒளி சேர் மணிக் குன்று அன்ன * ஈர் இரண்டு மால் வரைத் தோள் எம்மான் தன்னை **
    தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில் சென்று * அப்பொய் அறைவாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக்
    காய்ந்தானை * எம்மானைக் கண்டுகொண்டேன் * கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே 5
  • PT 2.5.6
    1093 கிடந்தானை தடங் கடலுள் பணங்கள் மேவிக் * கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே
    படர்ந்தானை * படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப் * பார் இடத்தை எயிறு கீற
    இடந்தானை ** வளை மருப்பின் ஏனம் ஆகி * இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
    கடந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன் * கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே 6
  • PT 2.5.7
    1094 பேணாத வலி அரக்கர் மெலிய அன்று * பெரு வரைத் தோள் இற நெரித்து அன்று அவுணர் கோனை *
    பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனைப் * பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை **
    ஊண் ஆகப் பேய் முலை நஞ்சு உண்டான் தன்னை * உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானை *
    காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் * கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே 7
  • PT 2.5.8
    1095 பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானைப் * பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை *
    தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் * தட வரைமேல் கிடந்தானை பணங்கள் மேவி *
    எண்ணானை எண் இறந்த புகழினானை * இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
    கண்ணானை * கண் ஆரக் கண்டுகொண்டேன் * கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே 8
  • PT 2.5.9
    1096 தொண்டு ஆயர் தாம் பரவும் அடியினானை * படி கடந்த தாளாளற்கு ஆள் ஆய் உய்தல்
    விண்டானை * தென் இலங்கை அரக்கர் வேந்தை * விலங்கு உண்ண வலங் கைவாய்ச் சரங்கள் ஆண்டு **
    பண்டு ஆய வேதங்கள் நான்கும் * ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும்
    கண்டானைத * தொண்டனேன் கண்டுகொண்டேன் * கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே 9
  • PT 2.5.10
    1097 ## பட நாகத்து அணைக் கிடந்து அன்று அவுணர் கோனைப் * பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி *
    தடம் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் * தாமரைக்கண் துயில் அமர்ந்த தலைவன் தன்னை **
    கடம் ஆரும் கருங் களிறு வல்லான் * வெல் போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல் *
    திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் * தீவினையை முதல் அரிய வல்லார் தாமே 10