Your browser does not support the audio element.
audio
1098 நண்ணாத வாளவுணரிடைப்புக்கு * வானவரைப்
பெண்ணாகிய அமுதூட்டும்பெருமானார் * மருவினிய
தண்ணார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துஉறைவாரை *
எண்ணாதேயிருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே. (2)
1099 பார்வண்ணமடமங்கை பனிநன்மாமலர்க்கிழத்தி *
நீர்வண்ணன்மார்வகத்தில் இருக்கையைமுன்நினைந்து, அவனூர் *
கார்வண்ணமுதுமுந்நீர்க் கடல்மல்லைத்தலசயனம் *
ஆரெண்ணும்நெஞ்சுடையார் அவர்எம்மைஆள்வாரே.
1100 ஏனத்தினுருவாகி நிலமங்கையெழில்கொண்டான் *
வானத்திலவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள *
கானத்தின் கடல்மல்லைத்தலசயனத்துஉறைகின்ற *
ஞானத்தினொளியுருவை நினைவார் என்நாயகரே. (2)
1101 விண்டாரைவென்று ஆவிவிலங்குண்ண * மெல்லியலார்
கொண்டாடும்மல்லகலம் அழலேறவெஞ்சமத்துக்
கண்டாரை * கடல்மல்லைத்தலசயனத்துஉறைவாரை *
கொண்டாடும்நெஞ்சுடையார் அவர் எங்கள் குலதெய்வமே.
1102 பிச்சச்சிறுபீலிச் சமண்குண்டர்முதலாயோர் *
விச்சைக் கிறையென்னும் அவ்விறையைப்பணியாதே *
கச்சிக்கிடந்தவனூர் கடல்மல்லைத்தலசயனம் *
நச்சித்தொழுவாரை நச்சுஎன்தன்நன்நெஞ்சே!
1103 புலன்கொள்நிதிக்குவையோடு புழைக்கைமா களிற்றினமும் *
நலங்கொள்நவமணிக்குவையும் சுமந்துஎங்கும் நான்றொசிந்து *
கலங்களியங்கும்மல்லைக் கடல்மல்லைத்தலசயனம் *
வலங்கொள்மனத்தாரவரை வலங்கொள்என்மடநெஞ்சே!
1104 பஞ்சிச் சிறுகூழையுருவாகி * மருவாத
வஞ்சப்பெண்நஞ்சுண்டஅண்ணல், முன்நண்ணாத *
கஞ்சைக்கடந்தவனூர் கடல்மல்லைத்தலசயனம் *
நெஞ்சில்தொழுவாரைத் தொழுவாய்என்தூய் நெஞ்சே!
1105 செழுநீர்மலர்க்கமலம் திரையுந்தவன்பகட்டால் *
உழுநீர்வயலுழவருழப் பின்முன்பிழைத்தெழுந்த *
கழுநீர்கடிகமழும் கடல்மல்லைத்தலசயனம் *
தொழுநீர்மனத்தவரைத் தொழுவாய்என்தூய் நெஞ்சே!
1106 பிணங்களிடுகாடதனுள் நடமாடுபிஞ்ஞகனோடு *
இணங்குதிருச்சக்கரத்து எம்பெருமானார்க்குஇடம் * விசும்பில்
கணங்களியங்கும்மல்லைக் கடல்மல்லைத்தலசயனம் *
வணங்குமனத்தாரவரை வணங்குஎன்தன் மடநெஞ்சே!
1107 கடிகமழுநெடுமறுகில் கடல்மல்லைத்தலசயனத்து *
அடிகளடியேநினையும் அடியவர்கள்தம்அடியான் *
வடிகொள்நெடுவேல்வலவன் கலிகன்றியொலிவல்லார் *
முடிகொள்நெடுமன்னவர்தம் முதல்வர்முதலாவாரே. (2)