Chapter 1

When will I see my god, the lord of Thiruvarangam - (இருள் இரிய)

அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்
When will I see my god, the lord of Thiruvarangam - (இருள் இரிய)
"Serving the Lord and being with Him to perform service are the highest actions. Likewise, seeing the devotees and living with them are also great deeds. Will I ever delight in serving the Azhagiya Manavaalan (beautiful bridegroom) who reclines on Adisesha in Thiruvarangam, amidst the Kaveri? When will my eyes feast upon Him? When will my mouth praise + Read more
பகவானை சேவிப்பதும் அவனோடு இருந்து அவனுக்குக் கைங்கர்யம் செய்வதும் மிகச் சிறந்த செயல்களாகும். அவ்வாறே அடியார்களைக் காண்பதும் அவர்களோடு வாழ்வதும் சிறந்த செயல்களாகும். காவிரியின் இடையில் திருவரங்கத்தில் திருவனந்தாழ்வான்மீது பள்ளி கொண்டிருக்கும் அழகிய மணவாளானை என்று சேவித்து மகிழ்வேனோ? + Read more
Verses: 647 to 657
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will stay under the feet of Nāranan, who showers goodness to all
  • PMT 1.1
    647 ## இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி *
    இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த *
    அரவு அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும் *
    அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி **
    திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி *
    திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும் *
    கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு * என்
    கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (1)
  • PMT 1.2
    648 ## வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த *
    வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ *
    வீயாத மலர்ச் சென்னி விதானமே போல் *
    மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் **
    காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை *
    கடி-அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் *
    மாயோனை மணத்தூணே பற்றி நின்று * என்
    வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே! (2)
  • PMT 1.3
    649 எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் *
    எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு *
    எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும் *
    தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற ** செம்பொன்
    அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற *
    அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் *
    அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு * அங்கு
    அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே (3)
  • PMT 1.4
    650 மாவினை வாய் பிளந்து உகந்த மாலை * வேலை
    வண்ணனை என் கண்ணனை * வன் குன்றம் ஏந்தி
    ஆவினை அன்று உய்யக் கொண்ட ஆயர்-ஏற்றை *
    அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப்
    பாவினை ** அவ் வடமொழியை பற்று-அற்றார்கள் *
    பயில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் *
    கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள் *
    கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே (4)
  • PMT 1.5
    651 இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி * இன்பத்
    தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த *
    துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால் *
    தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த **
    மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ *
    மதில்-அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் *
    மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு * என்
    மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே (5)
  • PMT 1.6
    652 அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு * ஏனை
    அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும் *
    தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித் *
    திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும் **
    களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக் *
    கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும் *
    ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு * என்
    உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே (6)
  • PMT 1.7
    653 மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி *
    ஐம்(வன்) புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
    துறந்து * இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத்
    தொல் நெறிக்கண் * நிலைநின்ற தொண்டரான **
    அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி *
    அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் *
    நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் *
    நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே (7)
  • PMT 1.8
    654 கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனல் சங்கம் *
    கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள் *
    கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் * வென்றிக்
    கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப **
    சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த *
    திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் *
    மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி *
    வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே (8)
  • PMT 1.9
    655 தூராத மனக்காதல்-தொண்டர் தங்கள்
    குழாம் குழுமித் * திருப்புகழ்கள் பலவும் பாடி *
    ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் *
    மழை சோர நினைந்து உருகி ஏத்தி ** நாளும்
    சீர் ஆர்ந்த முழவு-ஓசை பரவை காட்டும் *
    திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் *
    போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப் *
    பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே! (9)
  • PMT 1.10
    656 ## வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
    மண் உய்ய * மண்-உலகில் மனிசர் உய்ய *
    துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச்
    சுகம் வளர * அகம் மகிழும் தொண்டர் வாழ **
    அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும் *
    அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் *
    இன்ப மிகு பெருங் குழுவு கண்டு * யானும்
    இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே (10)
  • PMT 1.11
    657 ## திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத் *
    திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் *
    கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக் *
    கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால் **
    குடை விளங்கு விறல் தானைக் கொற்ற ஒள் வாள் *
    கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொல் செய்த *
    நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் *
    நலந்திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே (11)