Chapter 4
Āzhvār is overjoyed on seeing the all powerful Lord seated with His loved ones at Thiruchenkundrur - (வார் கடா)
எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)
“Āzhveer! Look at me residing in Thiruchenkundrur’s pushkarani, Thirusitrāru! I am there along with three thousand Vedāntis (vEthiyar) who are very powerful and supplicant. Look at the virility, prowess and the others alike I possess” unveils Bhagavān. Āzhvār’s worry is consequently erased and he immerses in enjoying His exquisite beauty, as expressed in these hymns.
“ஆழ்வீர்! திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றிலே மிகவும் வல்லமை பொருந்திய மூவாயிரம் வேதியர்கள் பரிந்து நோக்குவதையும் அவர்களோடு நான் சேர்ந்திருப்பதையும் பாரீர்! எனக்கே உரிய வீர்ய பராக்ரமம் முதலானவற்றையும் பாரீர்” என்று பகவான் அவற்றைக் காட்ட, ஆழ்வார் அச்சம் நீங்கி அவனது வடிவழகை அனுபவித்து + Read more
Verses: 3596 to 3606
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: புறநீர்மை
Timing: 6.00- 7.12. AM
Recital benefits: will attain moksha
- TVM 8.4.1
3596 ## வார் கடா அருவி யானை மா மலையின் *
மருப்பு இணைக் குவடு இறுத்து உருட்டி *
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து * அரங்கின்
மல்லரைக் கொன்று சூழ் பரண்மேல் **
போர் கடா அரசர் புறக்கிட * மாட
மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த *
சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் *
திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே (1) - TVM 8.4.2
3597 எங்கள் செல்சார்வு யாமுடை அமுதம் *
இமையவர் அப்பன் என் அப்பன் *
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும் *
பொருந்து மூவுருவன் எம் அருவன் **
செங்கயல் உகளும் தேம் பணை புடை சூழ் *
திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற * ஆதியான் அல்லால்
யாவர் மற்று என் அமர் துணையே? (2) - TVM 8.4.3
3598 என் அமர் பெருமான் இமையவர் பெருமான் *
இரு நிலம் இடந்த எம் பெருமான் *
முன்னை வல் வினைகள் முழுது உடன் மாள *
என்னை ஆள்கின்ற எம் பெருமான் **
தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில் *
திருச்சிற்றாற்றங்கரை மீபால் நின்ற எம் பெருமான் *
அடி அல்லால் சரண் நினைப்பிலும் *
பிறிது இல்லை எனக்கே (3) - TVM 8.4.4
3599 பிறிது இல்லை எனக்குப் பெரிய மூவுலகும் *
நிறையப் பேர் உருவமாய் நிமிர்ந்த *
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த *
கோல மாணிக்கம் என் அம்மான் **
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் *
திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய * மெய்ம்மையே நின்ற எம் பெருமான் *
அடிஇணை அல்லது ஓர் அரணே (4) - TVM 8.4.5
3600 அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை *
அது பொருள் ஆகிலும் * அவனை
அல்லது என் ஆவி அமர்ந்துஅணைகில்லாது *
ஆதலால் அவன் உறைகின்ற **
நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த *
நறும் புகை விசும்பு ஒளி மறைக்கும் *
நல்ல நீள் மாடத் திருச்செங்குன்றூரில் *
திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே (5) - TVM 8.4.6
3601 எனக்கு நல் அரணை எனது ஆர் உயிரை *
இமையவர் தந்தை தாய் தன்னை *
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானைத் *
தடம் கடல் பள்ளி அம்மானை **
மனக்கொள் சீர் மூவாயிரவர் * வண் சிவனும்
அயனும் தானும் ஒப்பார் வாழ் *
கனக்கொள் திண் மாடத் திருச்செங்குன்றூரில் *
திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே (6) - TVM 8.4.7
3602 திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்
கண்ட * அத் திருவடி என்றும் *
திருச் செய்ய கமலக் கண்ணும் * செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும் **
திருச் செய்ய கமல உந்தியும் * செய்ய
கமலை மார்பும் செய்ய உடையும் *
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் *
திகழ என் சிந்தையுளானே (7) - TVM 8.4.8
3603 திகழ என் சிந்தையுள் இருந்தானைச் *
செழு நிலத்தேவர் நான்மறையோர் *
திசை கைகூப்பி ஏத்தும் * திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங் கரையானை **
புகர் கொள் வானவர்கள் புகலிடம் தன்னை *
அசுரர் வன் கையர் வெம் கூற்றை *
புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும் *
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே (8) - TVM 8.4.9
3604 படைப்பொடு கெடுப்புக் காப்பவன் * பிரம
பரம்பரன் சிவப்பிரான் அவனே *
இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே *
புகழ்வு இல்லை யாவையும் தானே **
கொடைப் பெரும் புகழார் இனையர் தன் ஆனார் *
கூரிய விச்சையோடு ஒழுக்கம் *
நடைப் பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில் *
திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே (9) - TVM 8.4.10
3605 அமர்ந்த நாதனை அவர் அவர் ஆகி *
அவர்க்கு அருள் அருளும் அம்மானை *
அமர்ந்த தண் பழனத் திருச்செங்குன்றூரில் *
திருச்சிற்றாற்றங் கரையானை **
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் *
தம்பதி அவனிதேவர் வாழ்வு *
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை *
நான்முகனை அமர்ந்தேனே (10) - TVM 8.4.11
3606 ## தேனை நன் பாலை கன்னலை அமுதைத் *
திருந்து உலகு உண்ட அம்மானை *
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் *
மலர்மிசைப் படைத்த மாயோனை **
கோனை வண் குருகூர் வண் சடகோபன் *
சொன்ன ஆயிரத்துள் இப் பத்தும் *
வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும் *
பிறவி மா மாயக் கூத்தினையே (11)