Your browser does not support the audio element.
audio
3134 பாலனாய் ஏழுலகுண்டுபரிவின்றி *
ஆலிலையன்னவசஞ்செய்யும் அண்ணலார் *
தாளிணைமேலணி தண்ணந்துழாயென்றே
மாலுமால் * வல்வினையேன்மடவல்லியே. (2)
3135 வல்லிசேர்நுண்ணிடை ஆய்ச்சியர்தம்மொடும் *
கொல்லைமைசெய்து குரவைபிணைந்தவர் *
நல்லடிமேலணி நாறுதுழாயென்றே
சொல்லுமால் * சூழ்வினையாட்டியேன்பாவையே.
3136 பாவியல்வேத நன்மாலைபலகொண்டு *
தேவர்கள்மாமுனிவர் இறைஞ்சநின்ற *
சேவடிமேலணி செம்பொன்துழாயென்றே
கூவுமால் * கோள்வினையாட்டியேன்கோதையே.
3137 கோதிலவண்புகழ் கொண்டுசமயிகள் *
பேதங்கள்சொல்லிப் பிதற்றும்பிரான்பரன் *
பாதங்கள்மேலணி பைம்பொன் துழாயென்றே
ஓதுமால் * ஊழ்வினையேன்தடந்தோளியே.
3138 தோளிசேர்பின்னைபொருட்டு எருதேழ்தழீஇக்
கோளியார் * கோவலனார் குடக்கூத்தனார் *
நாளுநாள் * நைகின்றதால் என்தன்மாதரே.
3139 மாதர்மாமண்மடந்தைபொருட்டு ஏனமாய் *
ஆதியங்காலத்து அகலிடம்கீண்டவர் *
பாதங்கள்மேலணி பைம்பொன்துழாயென்றே
ஓதும் * மால்எய்தினள் என்தன்மடந்தையே.
3140 மடந்தையை வண்கமலத்திருமாதினை *
தடங்கொள்தார்மார்பினில்வைத்தவர் தாளின்மேல் *
வடங்கொள்பூந்தண்ணந்துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால் * வாணுதலீர்! என்மடக்கொம்பே.
3141 கொம்புபோற்சீதைபொருட்டு இலங்கைநகர் *
அம்பெரியுய்த்தவர் தாளிணைமேலணி *
வம்பவிழ்தண்ணந்துழாய்மலர்க்கே இவள்
நம்புமால் * நானிதற்கென்செய்கேன்? நங்கைமீர்!
3142 நங்கைமீர்! நீரும் ஓர்பெண்பெற்றுநல்கினீர் *
எங்ஙனேசொல்லுகேன்? யான்பெற்றஏழையை *
சங்கென்னும்சக்கரமென்னும் துழாயென்னும் *
இங்ஙனேசொல்லும் இராப்பகலென்செய்கேன்?
3143 என்செய்கேன்? என்னுடைப்பேதை என்கோமளம் *
என்சொல்லும் என்வசமுமல்லள்நங்கைமீர்! *
மின்செய்பூண்மார்பினன் கண்ணன்கழல்துழாய் *
பொன்செய்பூண் மென்முலைக்கென்றுமெலியுமே.
3144 மெலியுநோய்தீர்க்கும் நம்கண்ணன்கழல்கள்மேல் *
மலிபுகழ் வண்குருகூர்ச்சடகோபன்சொல் *
ஒலிபுகழாயிரத்து இப்பத்தும்வல்லவர் *
மலிபுகழ்வானவர்க்காவர் நற்கோவையே. (2)