Your browser does not support the audio element.
audio
2934 ஆடியாடி அகம்கரைந்து * இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி * எங்கும்
நாடிநாடி நரசிங்கா! என்று *
வாடிவாடும் இவ்வாணுதலே. (2)
2935 வாணுதல் இம்மடவரல் * உம்மைக்
காணுமாசையுள் நைகின்றாள் * விறல்
வாணன் ஆயிரந்தோள்துணித்தீர்! * உம்மைக்
காண நீரிரக்கமிலீரே.
2936 இரக்கமனத்தோடு எரியணை *
அரக்கும்மெழுகும் ஒக்குமிவள் *
இரக்கமெழீர் இதற்கென்செய்கேன்? *
அரக்கனிலங்கை செற்றீருக்கே.
2937 இலங்கைசெற்றவனே! என்னும் * பின்னும்
வலங்கொள் புள்ளுயர்த்தாய்! என்னும் * உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் * கண்ணீர்மிகக்
கலங்கிக் கைதொழும்நின்றிவளே.
2938 இவளிராப்பகல் வாய்வெரீஇ * தன
குவளையொண் கண்ணநீர்கொண்டாள் * வண்டு
திவளும் தண்ணந்துழாய்கொடீர் * என
தவளவண்ணர் தகவுகளே.
2939 தகவுடையவனே! என்னும் * பின்னும்
மிகவிரும்பும் பிரான்என்னும் * எனது
அகவுயிர்க்கு அமுதே! என்னும் * உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே.
2940 உள்ளுளாவி உலர்ந்துலர்ந்து * என
வள்ளலே! கண்ணனே! என்னும் * பின்னும்
வெள்ளநீர்க் கிடந்தாய்! என்னும் * என
கள்விதான்பட்ட வஞ்சனையே!
2941 வஞ்சனே! என்னும் கைதொழும் * தன
நெஞ்சம்வேவ நெடிதுயிர்க்கும் * விறற்
கஞ்சனை வஞ்சனைசெய்தீர்! * உம்மைத்
தஞ்சமென்று இவள்பட்டனவே!
2942 பட்டபோது எழுபோதறியாள் * விரை
மட்டலர் தண்துழாயென்னும் * சுடர்
வட்டவாய் நுதிநேமியீர் * நுமது
இட்டமென்கொல்? இவ்வேழைக்கே.
2943 ஏழைபேதை இராப்பகல் * தன
கேழி லொண்கண்ணநீர்கொண்டாள் * கிளர்
வாழ்வைவேவ இலங்கைசெற்றீர்? * இவள்
மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே.
2944 வாட்டமில்புகழ் வாமனனை * இசை
கூட்டி வண்சடகோபன்சொல் * அமை
பாட்டு ஓராயிரத்திப்பத்தால் * அடி
சூட்டலாகும் அந்தாமமே. (2)