Your browser does not support the audio element.
audio
2923 ஊனில்வாழுயிரே! நல்லைபோஉன்னைப்பெற்று *
வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான் *
தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம் *
தேனும்பாலும்நெய்யும் கன்னலும்அமுதுமொத்தே. (2)
2924 ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய! *
ஒத்தாயெப்பொருட்கும் உயிராய் * என்னைப்பெற்ற
அத்தாயாய்த்தந்தையாய் அறியாதன வறிவித்த *
அத்தா! நீசெய்தன அடியேனறியேனே.
2925 அறியாக்காலத்துள்ளே அடிமைக்கணன்புசெய்வித்து *
அறியாமாமாயத்து அடியேனைவைத்தாயால் *
அறியாமைக்குறளாய் நிலம்மாவலி! மூவடியென்று *
அறியாமைவஞ்சித்தாய் எனதாவியுள்கலந்தே.
2926 எனதாவியுள்கலந்த பெருநல்லுதவிக்கைம்மாறு *
எனதாவிதந்தொழிந்தேன் இனிமீள்வதென்பதுண்டே? *
எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்! *
எனதாவியார்? யான்ஆர்? தந்தநீகொண்டாக்கினையே.
2927 இனியார்ஞானங்களால் எடுக்கலெழாதவெந்தாய்! *
கனிவார்வீட்டின்பமே! என்கடல்படாவமுதே! *
தனியேன்வாழ்முதலே! பொழிலேழுமேனமொன்றாய் *
நுனியார் கோட்டில்வைத்தாய்! உனபாதம் சேர்ந்தேனே.
2928 சேர்ந்தார்தீவினைகட்கு அருநஞ்சைத் திண்மதியை *
தீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை *
சோர்ந்தேபோகல்கொடாச்சுடரை அரக்கியைமூக்கு
ஈர்ந்தாயை * அடியேனடைந்தேன் முதல்முன்னமே.
2929 முன்நல்யாழ்பயில்நூல் நரம்பின்முதிர்சுவையே! *
பன்னலார்பயிலும் பரனே!பவித்திரனே! *
கன்னலே! அமுதே! கார்முகிலே! என்கண்ணா! *
நின்னலாலிலேன்காண் என்னைநீகுறிக்கொள்ளே.
2930 குறிக்கொள்ஞானங்களால் எனையூழிசெய்தவமும் *
கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான் *
உறிக்கொண்டவெண்ணெய்பால் ஒளித்துண்ணு மம்மான்பின் *
நெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்கடிந்தே.
2931 கடிவார்தண்ணந்துழாய்க்கண்ணன் விண்ணவர் பெருமான் *
படிவானமிறந்த பரமன்பவித்திரன்சீர் *
செடியார்நோய்கள்கெடப் படிந்துகுடைந்தாடி *
அடியேன்வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே.
2932 களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று *
ஒளிக்கொண்டசோதியுமாய் உடன்கூடுவதென்று கொலோ? *
துளிக்கின்ற வானிந்நிலம் சுடராழிசங்கேந்தி *
அளிக்கின்றமாயப்பிரான் அடியார்கள்குழாங்களையே.
2933 குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை *
குழாங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த *
குழாங்கொளாயிரத்துள் இவைபத்தும்உடன்பாடி *
குழாங்களாய்அடியீருடன் கூடிநின்றாடுமினே. (2)