Chapter 1

Āndāl waking up her friends, the Lord's associates and Him asking for eternal service - (மார்கழித் திங்கள்)

ஆண்டாள் தோழிகளை எழுப்புதல் பின்பு பெருமாளை எழுப்பி பறை வேண்டுதல்
Āndāl waking up her friends, the Lord's associates and Him asking for eternal service - (மார்கழித் திங்கள்)
Periyāzhvār's daughter is Andal. Periyāzhvār had immense love for Krishna, but Andal's love surpassed even that. She desired to have Krishna as her husband and wished to perform intimate services for Him. Serving the Lord is the highest purpose and the greatest wealth. The desire and the act of serving Him come from His grace. Andal firmly assures that + Read more
பெரியாழ்வார் திருமகளார் ஆண்டாள். பெரியாழ்வாருக்குக் கண்ணன்மீது ஆசை. அதைவிட மிகுதியான ஆசை ஆண்டாளுக்கு. கண்ணனையே மணாளனாகப் பெற ஆசைப்பட்டாள். அவனுக்குக் குற்றேவல் அந்தரங்கக் கைங்கர்யம் செய்ய விரும்பினாள். கைங்கர்யமே சிறந்த புருஷார்த்தம். அதுவே நீங்காத செல்வம். அவனுக்குக் கைங்கர்யம் செய்ய + Read more
Verses: 474 to 503
Grammar: Eṭṭadi Nārsīrovi Karppaka Kocchakakkalippā / எட்டடி நார்சீரொவி கற்பக கொச்சகக் கலிப்பா
Recital benefits: Will receive the grace of the Lord and live happy
  • TP 1.1
    474 ## மார்கழித் திங்கள் * மதி நிறைந்த நன்னாளால் *
    நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர் ! *
    சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! *
    கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் **
    ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் *
    கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் *
    நாராயணனே நமக்கே பறை தருவான் *
    பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய் (1)
  • TP 1.2
    475 வையத்து வாழ்வீர்காள்! * நாமும் நம் பாவைக்கு *
    செய்யும் கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள்
    பையத் துயின்ற பரமன் அடி பாடி *
    நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி **
    மையிட்டு எழுதோம் * மலர் இட்டு நாம் முடியோம் *
    செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம் *
    ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி *
    உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய் (2)
  • TP 1.3
    476 ## ஓங்கி உலகு அளந்த * உத்தமன் பேர் பாடி *
    நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால் *
    தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து *
    ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப் **
    பூங்குவளைப் போதில் * பொறிவண்டு கண்படுப்பத் *
    தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
    வாங்கக் * குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் *
    நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய் (3)
  • TP 1.4
    477 ஆழி மழைக் கண்ணா! * ஒன்று நீ கை கரவேல் *
    ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி *
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப் *
    பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில் **
    ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து *
    தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் *
    வாழ உலகினில் பெய்திடாய் * நாங்களும்
    மார்கழி நீர் ஆட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் (4)
  • TP 1.5
    478 மாயனை * மன்னு வடமதுரை மைந்தனைத் *
    தூய பெருநீர் யமுனைத் துறைவனை *
    ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் *
    தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் **
    தூயோமாய் வந்து நாம் * தூமலர் தூவித் தொழுது *
    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் *
    போய பிழையும் புகுதருவான் நின்றனவும் *
    தீயினில் தூசு ஆகும் செப்பு ஏலோர் எம்பாவாய் (5)
  • TP 1.6
    479 புள்ளும் சிலம்பின காண் * புள் அரையன் கோயிலின் *
    வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ? *
    பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு *
    கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி **
    வெள்ளத்து அரவில் * துயில் அமர்ந்த வித்தினை *
    உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் *
    மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் *
    உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் (6)
  • TP 1.7
    480 கீசு கீசு என்று எங்கும் * ஆனைச்சாத்தன் * கலந்து
    பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே ! *
    காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து *
    வாச நறுங் குழல் ஆய்ச்சியர் ** மத்தினால்
    ஓசை படுத்த * தயிர் அரவம் கேட்டிலையோ? *
    நாயகப் பெண்பிள்ளாய் ! நாராயணன் மூர்த்தி *
    கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? *
    தேசம் உடையாய் ! திற ஏலோர் எம்பாவாய் (7)
  • TP 1.8
    481 கீழ்வானம் வெள்ளென்று * எருமை சிறு வீடு *
    மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும் *
    போவான் போகின்றாரைப் போகாமல் காத்து * உன்னைக்
    கூவுவான் வந்து நின்றோம் ** கோதுகலம் உடைய
    பாவாய் ! எழுந்திராய் * பாடிப் பறை கொண்டு *
    மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய *
    தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் *
    ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் (8)
  • TP 1.9
    482 தூமணி மாடத்துச் * சுற்றும் விளக்கு எரியத் *
    தூபம் கமழத் துயில் அணைமேல் கண்வளரும் *
    மாமான் மகளே ! மணிக் கதவம் தாள் திறவாய் *
    மாமீர் ! அவளை எழுப்பீரோ? ** உன் மகள் தான்
    ஊமையோ? * அன்றிச் செவிடோ? அனந்தலோ? *
    ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? *
    மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று *
    நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய் (9)
  • TP 1.10
    483 நோற்றுச் சுவர்க்கம் * புகுகின்ற அம்மனாய் ! *
    மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? *
    நாற்றத் துழாய் முடி நாராயணன் * நம்மால்
    போற்றப் பறை தரும் புண்ணியனால் ** பண்டு ஒருநாள்
    கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் *
    தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? *
    ஆற்ற அனந்தல் உடையாய் ! அருங்கலமே ! *
    தேற்றமாய் வந்து திற ஏலோர் எம்பாவாய் (10)
  • TP 1.11
    484 கற்றுக் கறவைக் * கணங்கள் பல கறந்து *
    செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் *
    குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே *
    புற்றரவு அல்குல் புனமயிலே ! போதராய் **
    சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து * நின்
    முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட *
    சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி ! * நீ
    எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏலோர் எம்பாவாய் (11)
  • TP 1.12
    485 கனைத்து இளங்கற்று எருமை * கன்றுக்கு இரங்கி *
    நினைத்து முலை வழியே நின்று பால் சோர *
    நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற்செல்வன் தங்காய் ! *
    பனித் தலை வீழ நின் வாசல் கடை பற்றிச் **
    சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற *
    மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் *
    இனித் தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம் ! *
    அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் (12)
  • TP 1.13
    486 புள்ளின் வாய் கீண்டானைப் * பொல்லா அரக்கனை *
    கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய் *
    பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் *
    வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று **
    புள்ளும் சிலம்பின காண் * போது அரிக் கண்ணினாய் ! *
    குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே *
    பள்ளிக் கிடத்தியோ? பாவாய் நீ நன்னாளால் *
    கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோர் எம்பாவாய் (13)
  • TP 1.14
    487 உங்கள் புழைக்கடைத் * தோட்டத்து வாவியுள் *
    செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் *
    செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் *
    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் **
    எங்களை முன்னம் * எழுப்புவான் வாய் பேசும் *
    நங்காய் ! எழுந்திராய் நாணாதாய் ! நாவுடையாய் ! *
    சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் *
    பங்கயக் கண்ணானைப் பாடு ஏலோர் எம்பாவாய் (14)
  • TP 1.15
    488 எல்லே ! இளங்கிளியே ! * இன்னம் உறங்குதியோ *
    சில் என்று அழையேன்மின் ! நங்கைமீர் ! போதருகின்றேன் *
    வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் *
    வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக ! **
    ஒல்லை நீ போதாய் * உனக்கு என்ன வேறு உடையை? *
    எல்லாரும் போந்தாரோ ? போந்தார் போந்து எண்ணிக்கொள் *
    வல் ஆனை * கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை *
    மாயனைப் பாடு ஏலோர் எம்பாவாய் (15)
  • TP 1.16
    489 ## நாயகனாய் நின்ற * நந்தகோபனுடைய
    கோயில் காப்பானே ! * கொடித் தோன்றும் தோரண
    வாயில் காப்பானே! * மணிக்கதவம் தாள் திறவாய் *
    ஆயர் சிறுமியரோமுக்கு ** அறை பறை
    மாயன் மணிவண்ணன் * நென்னலே வாய்நேர்ந்தான் *
    தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் *
    வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா ! *
    நீ நேய நிலைக் கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய் (16)
  • TP 1.17
    490 அம்பரமே தண்ணீரே * சோறே அறம் செய்யும் *
    எம்பெருமான் ! நந்தகோபாலா ! எழுந்திராய் *
    கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே ! குல விளக்கே ! *
    எம்பெருமாட்டி ! யசோதாய் ! அறிவுறாய் **
    அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த *
    உம்பர் கோமானே ! உறங்காது எழுந்திராய் *
    செம்பொன் கழலடிச் செல்வா! பலதேவா! *
    உம்பியும் நீயும் உறங்கு ஏலோர் எம்பாவாய் (17)
  • TP 1.18
    491 ## உந்து மத களிற்றன் * ஓடாத தோள் வலியன் *
    நந்த கோபாலன் மருமகளே ! நப்பின்னாய் ! *
    கந்தம் கமழும் குழலீ ! கடை திறவாய் *
    வந்து எங்கும் கோழி அழைத்தன காண் ** மாதவிப்
    பந்தர்மேல் * பல்கால் குயில் இனங்கள் கூவின காண் *
    பந்தார் விரலி ! உன் மைத்துனன் பேர் பாடச் *
    செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப *
    வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் (18)
  • TP 1.19
    492 குத்து விளக்கு எரியக் * கோட்டுக்கால் கட்டில் மேல் *
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி *
    கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் *
    வைத்துக் கிடந்த மலர் மார்பா ! வாய்திறவாய் **
    மைத் தடங்கண்ணினாய் * நீ உன் மணாளனை *
    எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் *
    எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால் *
    தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய் (19)
  • TP 1.20
    493 முப்பத்து மூவர் * அமரர்க்கு முன் சென்று *
    கப்பம் தவிர்க்கும் கலியே ! துயில் எழாய் *
    செப்பம் உடையாய்! திறல் உடையாய் ! * செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா ! துயில் எழாய் **
    செப்பு அன்ன மென் முலைச் * செவ்வாய்ச் சிறு மருங்குல் *
    நப்பின்னை நங்காய் ! திருவே ! துயில் எழாய் *
    உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை *
    இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய் (20)
  • TP 1.21
    494 ஏற்ற கலங்கள் * எதிர் பொங்கி மீது அளிப்ப *
    மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் *
    ஆற்றப் படைத்தான் மகனே ! அறிவுறாய் *
    ஊற்றம் உடையாய் ! பெரியாய் ! ** உலகினில்
    தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய் *
    மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் *
    ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே *
    போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய் (21)
  • TP 1.22
    495 அங்கண் மா ஞாலத்து அரசர் * அபிமான
    பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீழே *
    சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் *
    கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே **
    செங்கண் சிறுச் சிறிதே * எம்மேல் விழியாவோ? *
    திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் *
    அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் *
    எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய் (22)
  • TP 1.23
    496 ## மாரி மலை முழைஞ்சில் * மன்னிக் கிடந்து உறங்கும் *
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து *
    வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி *
    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு *
    போதருமா போலே * நீ பூவைப்பூ வண்ணா ! * உன்
    கோயில் நின்று இங்ஙனே போந்தருளி * கோப்பு உடைய
    சீரிய சிங்காசனத்து இருந்து * யாம் வந்த
    காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் (23)
  • TP 1.24
    497 ## அன்று இவ் உலகம் அளந்தாய் ! * அடி போற்றி *
    சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி *
    பொன்றச் சகடம் உதைத்தாய் ! புகழ் போற்றி *
    கன்று குணிலா எறிந்தாய் ! கழல் போற்றி **
    குன்று குடையா எடுத்தாய் ! * குணம் போற்றி *
    வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி *
    என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் *
    இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய் (24)
  • TP 1.25
    498 ஒருத்தி மகனாய்ப் பிறந்து * ஓர் இரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர *
    தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த *
    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் **
    நெருப்பு என்ன நின்ற நெடுமாலே ! * உன்னை
    அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில் *
    திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி *
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் (25)
  • TP 1.26
    499 மாலே மணிவண்ணா ! * மார்கழி நீர் ஆடுவான் *
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் *
    ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன *
    பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே **
    போல்வன சங்கங்கள் * போய்ப்பாடு உடையனவே *
    சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே *
    கோல விளக்கே கொடியே விதானமே *
    ஆலின் இலையாய் ! அருள் ஏலோர் எம்பாவாய் (26)
  • TP 1.27
    500 ## கூடாரை வெல்லும் சீர்க் * கோவிந்தா ! உன்தன்னைப்
    பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம் *
    நாடு புகழும் பரிசினால் நன்றாக *
    சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே **
    பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம் *
    ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு *
    மூட நெய் பெய்து முழங்கை வழிவார *
    கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் (27)
  • TP 1.28
    501 ## கறவைகள் பின் சென்று * கானம் சேர்ந்து உண்போம் *
    அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து * உன் தன்னைப்
    பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் *
    குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா ! ** உன் தன்னோடு
    உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது *
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் * உன் தன்னை
    சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே *
    இறைவா! நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய் (28)
  • TP 1.29
    502 ## சிற்றம் சிறுகாலே * வந்து உன்னைச் சேவித்து * உன்
    பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் *
    பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து * நீ
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது **
    இற்றைப் பறைகொள்வான் * அன்று காண் கோவிந்தா ! *
    எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் * உன் தன்னோடு
    உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் *
    மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய் (29)
  • TP 1.30
    503 ## வங்கக் கடல் கடைந்த * மாதவனைக் கேசவனைத் *
    திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி *
    அங்கு அப்பறை கொண்ட ஆற்றை * அணி புதுவைப்
    பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன **
    சங்கத் தமிழ் மாலை * முப்பதும் தப்பாமே *
    இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் *
    செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் *
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் (30)