Chapter 3

The daughter’s worry - (மை வண்ண)

ஒரு மகளின் கவலை
Verses: 2072 to 2081
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • TNT 3.21
    2072 ## மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ *
    மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட *
    எய் வண்ண வெம் சிலையே துணையா * இங்கே
    இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் **
    கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் *
    கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே *
    அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ ! *
    அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே! 21
  • TNT 3.22
    2073 நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா *
    நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும் *
    செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி *
    எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய ** இப்பால்
    கைவளையும் மேகலையும் காணேன் * கண்டேன்
    கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும் *
    எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு *
    இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே 22
  • TNT 3.23
    2074 உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து * என்
    ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே *
    தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச் *
    சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன **
    கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக் *
    கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது *
    புள் ஊரும் கள்வா! நீ போகேல் என்பன் *
    என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே 23
  • TNT 3.24
    2075 இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்! *
    இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட *
    பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் *
    பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ **
    ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி *
    உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து * என்
    பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து *
    புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே 24
  • TNT 3.25
    2076 மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும் *
    கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் *
    தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே *
    தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி **
    என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் *
    என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு *
    பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே *
    புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே 25
  • TNT 3.26
    2077 தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் *
    தேன் அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும் *
    பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த *
    அறு கால சிறு வண்டே! தொழுதேன் உன்னை **
    ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் *
    அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று *
    நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது *
    நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே 26
  • TNT 3.27
    2078 ## செங் கால மட நாராய் இன்றே சென்று *
    திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு *
    என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் *
    இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை ** நாளும்
    பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப் *
    பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் * தந்தால்
    இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் *
    இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே 27
  • TNT 3.28
    2079 தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாளச் *
    சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால் *
    மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த *
    வரை உருவின் மா களிற்றை தோழீ! * என் தன்
    பொன் இலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொண்டு *
    போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி *
    என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த *
    எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே 28
  • TNT 3.29
    2080 ## அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை *
    அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை *
    குன்றாத வலி அரக்கர் கோனை மாளக் *
    கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து
    வென்றானை ** குன்று எடுத்த தோளினானை *
    விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
    நின்றானை * தண் குடந்தைக் கிடந்த மாலை *
    நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே 29
  • TNT 3.30
    2081 ## மின்னு மா மழை தவழும் மேக வண்ணா! *
    விண்ணவர் தம் பெருமானே! அருளாய் என்று *
    அன்னம் ஆய் முனிவரோடு அமரர் ஏத்த *
    அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை **
    மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் *
    மான வேல் பரகாலன் கலியன் சொன்ன *
    பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் * தொல்லைப்
    பழவினையை முதல் அரிய வல்லார் தாமே 30