Your browser does not support the audio element.
audio
2032 நிதியினைப்பவளத்தூணை நெறிமையால்நினையவல்லார் *
கதியினைக்கஞ்சன்மாளக் கண்டுமுன்அண்டமாளும் *
மதியினைமாலைவாழ்த்தி வணங்கிஎன்மனத்துவந்த *
விதியினைக்கண்டுகொண்ட தொண்டனேன்விடுகிலேனே. (2)
2033 காற்றினைப்புனலைத்தீயைக் கடிமதிளிலங்கைசெற்ற
ஏற்றினை * இமயம்மேய எழில்மணித்திரளை * இன்ப
ஆற்றினை அமுதந்தன்னை அவுணனாருயிரையுண்ட
கூற்றினை * குணங்கொண்டுஉள்ளம் கூறுநீகூறுமாறே.
2034 பாயிரும்பரவைதன்னுள் பருவரைதிரித்து * வானோர்க்
காயிருந்துஅமுதம்கொண்ட அப்பனைஎம்பிரானை *
வேயிருஞ்சோலைசூழ்ந்து விரிகதிரிரியநின்ற *
மாயிருஞ்சோலைமேய மைந்தனைவணங்கினேனே.
2035 கேட்கயானுற்றதுண்டு கேழலாய்உலகங்கொண்ட *
பூக்கெழுவண்ணனாரைப் போதரக்கனவில்கண்டு *
வாக்கினால்கருமந்தன்னால் மனத்தினால்சிரத்தைதன்னால் *
வேட்கைமீதூரவாங்கி விழுங்கினேற்குஇனியவாறே.
2036 இரும்பனன்றுண்டநீர்போல் எம்பெருமானுக்கு * என்தன்
அரும்பெறலன்புபுக்கிட்டு அடிமைபூண்டுஉய்ந்துபோனேன் *
வரும்புயல்வண்ணனாரை மருவிஎன்மனத்துவைத்து *
கரும்பினின்சாறுபோலப் பருகினேற்குஇனியவாறே.
2037 மூவரில்முதல்வனாய ஒருவனை. உலகம்கொண்ட *
கோவினைக்குடந்தைமேய குருமணித்திரளை * இன்பப்
பாவினைப்பச்சைத்தேனைப் பைம்பொன்னையமரர்சென்னிப்
பூவினை * புகழும்தொண்டர் என்சொல்லிப்புகழ்வர்தாமே.
2038 இம்மையைமறுமைதன்னை எமக்குவீடாகிநின்ற *
மெய்ம்மையைவிரிந்தசோலை வியந்திருவரங்கம்மேய *
செம்மையைக்கருமைதன்னைத் திருமலையொருமையானை *
தன்மையைநினைவார் என்தன்தலைமிசைமன்னுவாரே.
2039 வானிடைப்புயலைமாலை வரையிடைப்பிரசம்ஈன்ற *
தேனிடைக்கரும்பின்சாற்றைத் திருவினைமருவிவாழார் *
மானிடப்பிறவி அந்தோ! மதிக்கிலர்கொள்க * தந்தம்
ஊனிடைக்குரம்பைவாழ்க்கைக்கு உறுதியேவேண்டினாரே.
2040 உள்ளமோ ஒன்றில்நில்லாது ஓசையிலெரிநின்றுண்ணும் *
கொள்ளிமேலெறும்புபோலக் குழையுமால்என்தனுள்ளம் *
தெள்ளியீர்! தேவர்க்கெல்லாம் தேவராய்உலகம்கொண்ட *
ஒள்ளியீர்! உம்மையல்லால் எழுமையும்துணையிலோமே.
2041 சித்தமும்செவ்வைநில்லாது என்செய்கேன்தீவினையேன்? *
பத்திமைக்கன்புடையேனாவதே பணியாய்எந்தாய்! *
முத்தொளிமரகதமே! முழங்கொளிமுகில்வண்ணா * என்
அத்த! நின்னடிமையல்லால் யாதுமொன்றறிகிலேனே.
2042 தொண்டெல்லாம்பரவிநின்னைத் தொழுதுஅடிபணியுமாறு
கண்டு * தான்கவலைதீர்ப்பான்ஆவதே பணியாய் எந்தாய்! *
அண்டமாய்எண்திசைக்கும் ஆதியாய்! நீதியான *
பண்டமாம்பரமசோதி! நின்னையேபரவுவேனே.
2043 ஆவியைஅரங்கமாலை அழுக்குடம்பெச்சில்வாயால் *
தூய்மையில்தொண்டனேன்நான் சொல்லினேன்தொல்லைநாமம் *
பாவியேன்பிழைத்தவாறென்று அஞ்சினேற்குஅஞ்சலென்று *
காவிபோல்வண்ணர்வந்து என்கண்ணுளேதோன்றினாரே.
2044 இரும்பனன்றுண்டநீரும் போதரும்கொள்க * என்றன்
அரும்பிணிபாவமெல்லாம் அகன்றனஎன்னைவிட்டு *
சுரும்பமர்சோலைசூழ்ந்த அரங்கமாகோயில்கொண்ட *
கரும்பினைக்கண்டுகொண்டு என்கண்ணிணைகளிக்குமாறே.
2045 காவியைவென்றகண்ணார் கலவியேகருதி * நாளும்
பாவியேனாகஎண்ணி அதனுள்ளேபழுத்தொழிந்தேன் *
தூவிசேரன்னம்மன்னும் சூழ்புனல்குடந்தையானை *
பாவியேன்பாவியாது பாவியேனாயினேனே.
2046 முன்பொலாஇராவணன்தன் முதுமதிளிலங்கைவேவித்து *
அன்பினால்அனுமன்வந்து ஆங்கடியிணைபணியநின்றார்க்கு *
என்பெலாம்உருகியுக்கிட்டு என்னுடைநெஞ்சமென்னும் *
அன்பினால்ஞானநீர்கொண்டு ஆட்டுவன்அடியனேனே.
2047 மாயமான்மாயச்செற்று மருதிறநடந்து * வையம்
தாயமாபரவைபொங்கத் தடவரைதிரித்து * வானோர்க்கு
ஈயுமால்எம்பிரானார்க்கு என்னுடைச்சொற்களென்னும் *
தூயமாமாலைகொண்டு சூட்டுவன்தொண்டனேனே.
2048 பேசினார்பிறவிநீத்தார் பேருளான்பெருமைபேசி *
ஏசினார்உய்ந்துபோனார்என்பது இவ்வுலகின்வண்ணம் *
பேசினேன்ஏசமாட்டேன் பேதையேன்பிறவிநீத்தற்கு *
ஆசையோபெரிதுகொள்க அலைகடல்வண்ணர்பாலே.
2049 இளைப்பினை இயக்கம்நீக்கி இருந்துமுன்இமையைக்கூட்டி *
அளப்பிலைம்புலனடக்கி அன்புஅவர்கண்ணேவைத்து *
துளக்கமில்சிந்தைசெய்து தோன்றலும்சுடர்விட்டு * ஆங்கே
விளக்கினைவிதியின்காண்பார் மெய்ம்மையைக்காண்கிற்பாரே.
2050 பிண்டியார்மண்டையேந்திப் பிறர்மனைதிரிதந்துண்ணும்
முண்டியான் * சாபம்தீர்த்த ஒருவனூர் * உலகமேத்தும்
கண்டியூர்அரங்கம்மெய்யம் கச்சிபேர்மல்லையென்று
மண்டினார் * உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே? (2)
2051 வானவர்தங்கள்கோனும் மலர்மிசையயனும் * நாளும்
தேமலர்தூவியேத்தும் சேவடிச்செங்கண்மாலை *
மானவேல்கலியன்சொன்ன வண்தமிழ்மாலைநாலைந்தும் *
ஊனமதின்றிவல்லார் ஒளிவிசும்பாள்வர்தாமே. (2)