Your browser does not support the audio element.
audio
1778 காவார்மடல்பெண்ணை அன்றிலரிகுரலும் *
ஏவாயினூடியங்கும் எஃகில்கொடிதாலோ! *
பூவார்மணம்கமழும் புல்லாணிகைதொழுதேன் *
பாவாய்! இதுநமக்கு ஓர்பான்மையேயாகாதே. (2)
1779 முன்னம்குறளுருவாய் மூவடிமண்கொண்டளந்த *
மன்னன்சரிதைக்கே மாலாகிப்பொன்பயந்தேன் *
பொன்னங்கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி *
அன்னமாய்நூல்பயந்தாற்கு ஆங்கிதனைச் செப்புமினே.
1780 வவ்வித்துழாயதன்மேல் சென்றதனிநெஞ்சம் *
செவ்வியறியாது நிற்குங்கொல்? நித்திலங்கள் *
பவ்வத்திரையுலவு புல்லாணிகைதொழுதேன் *
தெய்வச்சிலையாற்கு என்சிந்தைநோய்செப்புமினே.
1781 பரியஇரணியனதுஆகம் அணியுகிரால் *
அரியுருவாய்க்கீண்டான் அருள்தந்தவா! நமக்கு *
பொருதிரைகள்போந்துலவு புல்லாணிகைதொழுதேன் *
அரிமலர்க்கண்ணீர்ததும்ப அந்துகிலும்நில்லாவே.
1782 வில்லால்இலங்கைமலங்கச் சரம்துரந்த *
வல்லாளன்பின்போன நெஞ்சம்வருமளவும் *
எல்லாரும்என்தன்னை ஏசிலும்பேசிடினும் *
புல்லாணியெம்பெருமான் பொய்கேட்டிருந்தேனே.
1783 சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான் *
அழன்றுகொடிதாகி அஞ்சுடரில் தானடுமால் *
செழுந்தடம் பூஞ்சோலைசூழ் புல்லாணிகைதொழுதேன் *
இழந்திருந்தேன் என்தன் எழில்நிறமும் சங்குமே.
1784 கனையாரிடிகுரலின் கார்மணியின்நாவாடல் *
தினையேனும்நில்லாது தீயிற்கொடிதாலோ *
புனையார்மணிமாடப் புல்லாணிகைதொழுதேன் *
வினையேன்மேல்வேலையும் வெந்தழலேவீசுமே.
1785 தூம்புடைக்கைவேழம் வெருவமருப்பொசித்த *
பாம்பினணையான் அருள்தந்தவா! நமக்கு *
பூஞ்செருந்திபொன்சொரியும் புல்லாணிகைதொழுதேன் *
தேம்பலிளம்பிறையும் என்தனக்குஓர்வெந்தழலே.
1786 வேதமும்வேள்வியும் விண்ணும் இருசுடரும் *
ஆதியுமானான் அருள்தந்தவா! நமக்கு *
போதலரும்புன்னைசூழ் புல்லாணிகைதொழுதேன் *
ஓதமும்நானும் உறங்காதிருந்தேனே.
1787 பொன்னலரும்புன்னைசூழ் புல்லாணியம்மானை *
மின்னிடையார்வேட்கைநோய்கூர இருந்ததனை *
கன்னவிலும்திண்தோள் கலியனொலிவல்லார் *
மன்னவராய்மண்ணாண்டு வானாடுமுன்னுவரே. (2)