Your browser does not support the audio element.
audio
1018 கொங்கலர்ந்தமலர்க்குருந்தம்ஒசித்த கோவலன் எம்பிரான் *
சங்குதங்குதடங்கடல் துயில்கொண்டதாமரைக் கண்ணினன் *
பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்தம்மிடம் * பொங்குநீர்ச்
செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடம் அடைநெஞ்சமே! (2)
1019 பள்ளியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை *
பிள்ளையாய்உயிருண்டஎந்தை பிரானவன்பெருகுமிடம் *
வெள்ளியான்கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி * நாள்தொறும்
தெள்ளியார்வணங்கும்மலைத் திருவேங்கடம் அடைநெஞ்சமே! (2)
1020 நின்றமாமருதுஇற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான் *
என்றும்வானவர்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான் *
கன்றிமாரிபொழிந்திடக் கடிதாநிரைக்குஇடர் நீக்குவான் *
சென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடம் அடைநெஞ்சமே!
1021 பார்த்தற்காய்அன்றுபாரதம்கைசெய்திட்டுவென்ற பரஞ்சுடர் *
கோத்துஅங்குஆயர்தம்பாடியில் குரவைபிணைந்தஎங்கோவலன் *
ஏத்துவார்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவிய எம்பிரான் *
தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடம் அடைநெஞ்சமே! (2)
1022 வண்கையான் அவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்று, மாணியாய் *
மண்கையால்இரந்தான் மராமரமேழும்எய்தவலத்தினான் *
எண்கையான்இமயத்துள்ளான் இருஞ்சோலைமேவிய எம்பிரான் *
திண்கைம்மாதுயர்தீர்த்தவன் திருவேங்கடம் அடைநெஞ்சமே!
1023 எண்திசைகளும்ஏழுலகமும்வாங்கிப் பொன்வயிற்றில்பெய்து *
பண்டுஒராலிலைப்பள்ளிகொண்டவன் பான்மதிக்குஇடர் தீர்த்தவன் *
ஒண்திறலவுணனுரத்துகிர்வைத்தவன் ஒள்ளெயிற்றொடு *
திண்திறலரியாயவன் திருவேங்கடம் அடைநெஞ்சமே!
1024 பாரும்நீர்எரிகாற்றினோடு ஆகாசமும்இவையாயினான் *
பேரும்ஆயிரம்பேசநின்ற பிறப்பிலிபெருகுமிடம் *
காரும்வார்பனிநீள்விசும்பிடைச் சோருமாமுகில் தோய்தர *
சேரும்வார்பொழில்சூழ்எழில்திருவேங்கடம் அடைநெஞ்சமே!
1025 அம்பரம்அனல்கால்நிலம் சலமாகிநின்றஅமரர்கோன் *
வம்புலாமலர்மேல் மலிமடமங்கைதன்கொழுநனவன் *
கொம்பினன்னஇடைமடக்குறமாதர் நீளிதணந்தொறும் *
செம்புனமவைகாவல்கொள் திருவேங்கடம் அடைநெஞ்சமே!
1026 பேசுமின்திருநாமம்எட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும் *
பேசுவார்த்தம்மைஉய்யவாங்கிப் பிறப்பறுக்கும்பிரானிடம் *
வாசமாமலர்நாறுவார்பொழில் சூழ்தரும்உலகுக்கெல்லாம் *
தேசமாய்த்திகழும்மலைத் திருவேங்கடம் அடைநெஞ்சமே!
1027 செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடத்துஉறைசெல்வனை *
மங்கையர்தலைவன்கலிகன்றி வண்தமிழ்ச்செஞ்சொல் மாலைகள் *
சங்கையின்றித்தரித்துஉரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே *
வங்கமாகடல்வையம்காவலராகி வானுலகாள்வரே. (2)