Your browser does not support the audio element.
audio
1028 தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும் *
நோயேபட்டொழிந்தேன் நுன்னைக்காண்பதோராசையினால் *
வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா! *
நாயேன்வந்துஅடைந்தேன்நல்கி ஆளென்னைக் கொண்டருளே. (2)
1029 மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு * மாநிலத்து
நானேநானாவிதநரகம்புகும் பாவம்செய்தேன் *
தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை * என்
ஆனாய்! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
1030 கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றி லாமையினால் *
என்றேனும்இரந்தார்க்கு இனிதாகஉரைத்தறியேன் *
குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா! *
அன்றேவந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
1031 குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த் தொழிந்தேன் *
நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம்செய்துமிலேன் *
நிலம்தோய்நீள்முகில்சேர் நெறியார்திருவேங்கடவா! *
அலந்தேன்வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
1032 எப்பாவம்பலவும் இவையேசெய்துஇளைத்தொழிந்தேன் *
துப்பா! நின்னடியே தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன் *
செப்பார்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை * என்
அப்பா! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
1033 மன்னாய்நீர்எரிகால் மஞ்சுலாவும்ஆகாசமுமாம் *
புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்து எய்த்தொழிந்தேன் *
விண்ணார்நீள்சிகர விரையார்திருவேங்கடவா! *
அண்ணா! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
1034 தெரியேன்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன் *
பெரியேனாயினபின் பிறர்க்கேயுழைத்துஏழையானேன் *
கரிசேர்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா! *
அரியே! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
1035 நோற்றேன்பல்பிறவி நுன்னைக்காண்பதோராசையினால் *
ஏற்றேனிப்பிறப்பே இடருற்றனனெம்பெருமான்! *
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ்வேங்கடவா! *
ஆற்றேன்வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
1036 பற்றேல்ஒன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன் *
மற்றேலொன்றறியேன் மாயனே! எங்கள்மாதவனே! *
கல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா! *
அற்றேன்வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
1037 கண்ணாய்ஏழுலகுக்குஉயிராய எங்கார்வண்ணனை *
விண்ணோர் தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை *
திண்ணார்மாடங்கள்சூழ் திருமங்கையர்கோன்கலியன் *
பண்ணார்பாடல்பத்தும்பயில்வார்க்குஇல்லைபாவங்களே. (2)