Your browser does not support the audio element.
audio
1008 அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் * அவுணன்
பொங்கஆகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம் *
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால் * அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே.
1009 அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்கோளரியாய் * அவுணன்
கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம் *
மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்துடிவாய்கடுப்ப *
சிலைக்கைவேடர்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே.
1010 ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்கோளரியாய் * அவுணன்
வாய்ந்தஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தஅம்மானதிடம் *
ஓய்ந்தமாவும்உடைந்தகுன்றும் அன்றியும்நின்றுஅழலால் *
தேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே.
1011 எவ்வும்வெவ்வேல் பொன்பெயரோன் ஏதலனின்னுயிரை
வவ்வி * ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம் *
கவ்வுநாயும்கழுகும்உச்சிபோதொடுகால்சுழன்று *
தெய்வமல்லால்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.
1012 மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்கோளரியாய் * அவுணன்
பொன்றஆகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம் *
நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய *
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே.
1013 எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய்எயிற்றொடுஇதுஎவ்வுருவென்று *
இரிந்துவானோர் கலங்கியோட இருந்த அம்மானதிடம் *
நெரிந்தவேயின்முழையுள்நின்று நீணெறிவாய்உழுவை *
திரிந்தஆனைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே.
1014 முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும் *
அனைத்தும்அஞ்சஆளரியாய் இருந்தஅம்மானதிடம் *
கனைத்ததீயும்கல்லுமல்லா வில்லுடைவேடருமாய் *
தினைத்தனையும்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.
1015 நாத்தழும்பநான்முகனும் ஈசனுமாய்முறையால்
ஏத்த * அங்குஒராளரியாய் இருந்த அம்மானதிடம் *
காய்த்தவாகைநெற்றுஒலிப்பக் கல்லதர்வேய்ங்கழை போய் *
தேய்த்ததீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே.
1016 நல்லைநெஞ்சே! நாம்தொழுதும் நம்முடைநம்பெருமான் *
அல்லிமாதர்புல்கநின்ற ஆயிரந்தோளனிடம் *
நெல்லிமல்கிக்கல்லுடைப்பப் புல்லிலையார்த்து * அதர்வாய்ச்
சில்லுசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே.
1017 செங்கணாளிஇட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய *
எங்களீசனெம்பிரானை இருந்தமிழ் நூற்புலவன் *
மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறைதார்க்கலியன் *
செங்கையாளன்செஞ்சொல்மாலை வல்லவர்தீதிலரே. (2)