Your browser does not support the audio element.
audio
3376 குரவையாய்ச்சியரோடுகோத்ததும் குன்றமொன்றேந்தியதும் *
உரவுநீர்ப்பொய்கைநாகம்காய்ந்ததும் உட்படமற்றும்பல *
அரவில்பள்ளிப்பிரான்தன் மாயவினைகளையேயலற்றி *
இரவும்நன்பகலும் தவிர்கிலம் என்னகுறைவெனக்கே? (2)
3377 கேயத்தீங்குழலூதிற்றும் நிரைமேய்த்ததும் * கெண்டை யொண்கண்
வாசப்பூங்குழல்பின்னைதோள்கள்மணந்ததும்மற்றும்பல *
மாயக்கோலப்பிரான்தன்செய்கைநினைந்துமனம்குழைந்து *
நேயத்தோடுகழிந்தபோது எனக்குஎவ்வுலகம்நிகரே?
3378 நிகரில்மல்லரைச்செற்றதும் நிரைமேய்த்ததும் நீள்நெடுங்கை *
சிகரமாகளிறட்டதும் இவைபோல்வனவும்பிறவும் *
புகர்கொள்சோதிப்பிரான்தன் செய்கைநினைந்துபுலம்பி * என்றும்
நுகர்வைகல்வைகப்பெற்றேன் எனக்கென்னினி நோவதுவே?
3379 நோவஆய்ச்சியுரலோடார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணை *
சாவப்பாலுண்டதும் ஊர்சகடமிறச்சாடியதும் *
தேவக்கோலப்பிரான்தன்செய்கைநினைந்துமனம்குழைந்து *
மேவக்காலங்கள்கூடினேன் எனக்கென்னினி வேண்டுவதே?
3380 வேண்டிதேவரிரக்கவந்துபிறந்ததும் வீங்கிருள்வாய்
பூண்டு * அன்றன்னைபுலம்பப்போய் அங்கோர்ஆய்க்குலம் புக்கதும் *
காண்டலின்றிவளர்ந்து கஞ்சனைத்துஞ்சவஞ்சம் செய்ததும் *
ஈண்டுநானலற்றப்பெற்றேன் எனக்கென்னஇகலுளதே?
3381 இகல்கொள்புள்ளைப்பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும் *
உயர்கொள்சோலைக்குருந்தொசித்ததும் உட்படமற்றும் பல *
அகல்கொள்வையமளந்தமாயன் என்னப்பன்தன் மாயங்களே *
பகலிராப்பரவப்பெற்றேன் எனக்கென்னமனப்பரிப்பே?
3382 மனப்பரிப்போடு அழுக்குமானிடசாதியில்தான்பிறந்து *
தனக்குவேண்டுருக்கொண்டு தான்தனசீற்றத்தினை முடிக்கும் *
புனத்துழாய்முடிமாலைமார்பன் என்னப்பன்தன் மாயங்களே *
நினைக்கும்நெஞ்சுடையேன் எனக்கினியார்நிகர் நீணிலத்தே?
3383 நீணிலத்தொடுவான்வியப்பநிறைபெரும்போர்கள்செய்து *
வாணனாயிரந்தோள்துணித்ததும் உட்படமற்றும்பல *
மாணியாய்நிலங்கொண்டமாயன் என்னப்பன்தன் மாயங்களே *
காணும்நெஞ்சுடையேன் எனக்கினியென்னகலக்கமுண்டே?
3384 கலக்கவேழ்கடலேழ்மலை உலகேழும்கழியக்கடாய் *
உலக்கத்தேர்கொடுசென்றமாயமும் உட்படமற்றும்பல *
வலக்கையாழியிடக்கைச்சங்கம் இவையுடைமால் வண்ணனை *
மலக்குநாவுடையேற்கு மாறுளதோஇம்மண்ணின் மிசையே?
3385 மண்மிசைப்பெரும்பாரம்நீங்க ஓர்பாரதமாபெரும்போர்
பண்ணி * மாயங்கள்செய்துசேனையைப்பாழ்பட நூற்றிட்டுப்போய் *
விண்மிசைத்தனதாமமேபுக மேவியசோதிதன்தாள் *
நண்ணிநான்வணங்கப்பெற்றேன் எனக்கார்பிறர் நாயகரே?
3386 நாயகன்முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகும் * தன்
வாயகம்புகவைத்துமிழ்ந்தவையாய் அவையல்லனுமாம் *
கேசவனடியிணை மிசைக் குரு கூர்ச்சடகோபன்சொன்ன *
தூயவாயிரத்திப்பத்தால் பத்தராவர்துவளின்றியே. (2)