Your browser does not support the audio element.
audio
3046 புகழுநல்லொருவன் என்கோ! பொருவில்சீர்ப் பூமியென்கோ? *
திகழும்தண்பரவையென்கோ? தீயென்கோ வாயுவென்கோ? *
நிகழுமாகாசமென்கோ? நீள்சுடரிரண்டுமென்கோ? *
இகழ்விலிவ்வனைத்துமென்கோ? கண்ணனைக்கூவுமாறே. (2)
3047 கூவுமாறறியமாட்டேன் குன்றங்கள்அனைத்துமென்கோ? *
மேவுசீர்மாரியென்கோ? விளங்குதாரகைகளென்கோ? *
நாவியல்கலைகளென்கோ? ஞானநல்லாவியென்கோ? *
பாவுசீர்க்கண்ணனெம்மான் பங்கயக்கண்ணனையே.
3048 பங்கையக்கண்ணனென்கோ? பவளச்செவ்வாயனென்கோ? *
அங்கதிரடியனென்கோ? அஞ்சனவண்ணனென்கோ? *
செங்கதிர்முடியனென்கோ? திருமறுமார்வனென்கோ? *
சங்குசக்கரத்தனென்கோ? சாதிமாணிக்கத்தையே.
3049 சாதிமாணிக்கமென்கோ? சவிகொள்பொன் முத்தமென்கோ? *
சாதிநல்வயிரமென்கோ? தவிவில்சீர்விளக்கமென்கோ? *
ஆதியஞ்சோதியென்கோ? ஆதியம்புருடனென்கோ? *
ஆதுமில்காலத்தெந்தை அச்சுதனமலனையே.
3050 அச்சுதனமலனென்கோ? அடியவர்வினைகெடுக்கும் *
நச்சுமாமருந்தமென்கோ? நலங்கடலமுதமென்கோ? *
அச்சுவைக்கட்டியென்கோ? அறுசுவையடிசிலென்கோ? *
நெய்ச்சுவைத்தேறலென்கோ? கனியென்கோ? பாலென்கேனோ.
3051 பாலென்கோ? நான்குவேதப்பயனென்கோ? சமயநீதி *
நூலென்கோ? நுடங்குகேள்வியிசையென்கோ? * இவற்றுள்நல்ல
மேலென்கோ? வினையின்மிக்கபயனென்கோ? * கண்ணனென்கோ?
மாலென்கோ? மாயனென்கோ? வானவராதியையே.
3052 வானவராதியென்கோ? வானவர்தெய்வமென்கோ? *
வானவர்போகமென்கோ? வானவர்முற்றுமென்கோ? *
ஊனமில்செல்வமென்கோ? ஊனமில்சுவர்க்கமென்கோ? *
ஊனமில்மோக்கமென்கோ? ஒளிமணிவண்ணனையே.
3053 ஒளிமணிவண்ணனென்கோ? ஒருவனென்றேத்தநின்ற *
நளிர்மதிச்சடையனென்கோ? நான்முகக்கடவுளென்கோ? *
அளிமகிழ்ந்துலகமெல்லாம் படைத்தவையேத்தநின்ற *
களிமலர்த்துளவனெம்மான் கண்ணனைமாயனையே.
3054 கண்ணனைமாயன்தன்னைக் கடல்கடைந்தமுதங்கொண்ட *
அண்ணலைஅச்சுதனை அனந்தனை அனந்தன்தன்மேல் *
நண்ணிநன்குறைகின்றானை ஞாலமுண்டுமிழ்ந்தமாலை *
எண்ணுமாறறியமாட்டேன்யாவையும்யவரும்தானே.
3055 யாவையும்யவரும்தானாய் அவரவர்சமயந்தோறும் *
தோய்விலன்புலனைந்துக்கும் சொலப்படான்உணர்வின் மூர்த்தி *
ஆவிசேருயிரினுள்ளால் ஆதுமோர்பற்றிலாத *
பாவனையதனைக்கூடில் அவனையுங்கூடலாமே.
3056 கூடிவண்டறையும்தண்தார்க் கொண்டல்போல் வண்ணன்தன்னை *
மாடலர்பொழில்குருகூர் வண்சடகோபன்சொன்ன *
பாடலோராயிரத்துள் இவையுமொருபத்தும்வல்லார் *
வீடிலபோகமெய்தி விரும்புவரமரர்மொய்த்தே (2)