Your browser does not support the audio element.
audio
1698 தொண்டீர்! உய்யும்வகைகண்டேன் துளங்காஅரக்கர்துளங்க * முன்
திண்தோள்நிமிரச்சிலைவளையச் சிறிதேமுனிந்ததிருமார்பன் *
வண்டார்கூந்தல்மலர்மங்கை வடிக்கண்மடந்தைமாநோக்கம்
கண்டாள் * கண்டுகொண்டுகந்த கண்ணபுரம்நாம்தொழுதுமே. (2)
1699 பொருந்தாஅரக்கர்வெஞ்சமத்துப் பொன்றஅன்றுபுள்ளூர்ந்து *
பெருந்தோள்மாலிதலைபுரளப் பேர்ந்தஅரக்கர்தென்னிலங்கை *
இருந்தார்தம்மையுடன்கொண்ட அங்குஎழிலார்பிலத்துப்புக்கொளிப்ப *
கருந்தாள்சிலைகைக்கொண்டானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1700 வல்லியிடையாள்பொருட்டாக மதிள்நீரிலங்கையார்கோவை *
அல்லல்செய்துவெஞ்சமத்துள் ஆற்றல்மிகுந்தஆற்றலான் *
வல்லாளரக்கர்குலப்பாவைவாட முனிதன்வேள்வியை *
கல்விச்சிலையால்காத்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1701 மல்லைமுந்நீரஅதர்பட வரிவெஞ்சிலைகால்வளைவித்து *
கொல்லைவிலங்குபணிசெய்யக் கொடியோனிலங்கைபுகலுற்று *
தொல்லைமரங்கள்புகப்பெய்து துவலைநிமிர்ந்துவானணவ *
கல்லால்கடலையடைத்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1702 ஆமையாகிஅரியாகி அன்னமாகி * அந்தணர்தம்
ஓமமாகிஊழியாகி உலகுசூழ்ந்தநெடும்புணரி *
சேமமதிள்சூழிலங்கைக்கோன் சிரமுங்கரமும்துணித்து * முன்
காமற்பயந்தான்கருதுமூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1703 வருந்தாதிருநீமடநெஞ்சே! நம்மேல்வினைகள்வாரா * முன்
திருந்தாஅரக்கர்தென்னிலங்கை செந்தீயுண்ணச்சிவந்து, ஒருநாள் *
பெருந்தோள்வாணற்குஅருள்புரிந்து பின்னைமணாளனாகி * முன்
கருந்தாள்களிறொன்றொசித்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1704 இலையார்மலர்ப்பூம்பொய்கைவாய் முதலைதன்னால்அடர்ப்புண்டு *
கொலையார்வேழம்நடுக்குற்றுக்குலைய அதனுக்குஅருள்புரிந்தான் *
அலைநீரிலங்கைத்தசக்கிரீவற்கு இளையோற்குஅரசையருளி * முன்
கலைமாச்சிலையால்எய்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1705 மாலாய்மனமே! அருந்துயரில் வருந்தாதிருநீ * வலிமிக்க
காலார்மருதும்காய்சினத்தகழுதும் கதமாக்கழுதையும் *
மாலார்விடையும்மதகரியும் மல்லருயிரும்மடிவித்து *
காலால்சகடம்பாய்ந்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1706 குன்றால்மாரிபழுதாக்கிக் கொடியேரிடையாள்பொருட்டாக *
வன்தாள்விடையேழ்அன்றடர்த்த வானோர்பெருமான்மாமாயன் *
சென்றான்தூதுபஞ்சவர்க்காய்த் திரிகாற்சகடம்சினமழித்து *
கன்றால்விளங்காயெறிந்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1707 கருமாமுகில்தோய்நெடுமாடக் கண்ணபுரத்தெம்மடிகளை *
திருமாமகளால்அருள்மாரி செழுநீராலிவளநாடன் *
மருவார்புயற்கைக்கலிகன்றி மங்கைவேந்தனொலிவல்லார் *
இருமாநிலத்துக்கரசாகி இமையோரிறைஞ்சவாழ்வாரே. (2)