Your browser does not support the audio element.
audio
1708 வியமுடைவிடையினம் உடைதரமடமகள் *
குயமிடைதடவரை அகலமதுடையவர் *
நயமுடைநடையனம் இளையவர்நடைபயில் *
கயமிடைகணபுரம் அடிகள்தம்இடமே. (2)
1709 இணைமலிமருதினொடு எருதிறஇகல்செய்து *
துணைமலிமுலையவள் மணமிகுகலவியுள் *
மணமலிவிழவினொடு அடியவரளவிய *
கணமலிகணபுரம் அடிகள்தம்இடமே.
1710 புயலுறுவரைமழை பொழிதர, மணிநிரை *
மயலுற, வரைகுடை எடுவியநெடியவர் *
முயல்துளர்மிளைமுயல்துள வளவிளைவயல் *
கயல்துளுகணபுரம் அடிகள்தம்இடமே.
1711 ஏதலர்நகைசெய இளையவரளைவெணெய் *
போதுசெய்தமரிய புனிதர், நல்விரைமலர் *
கோதியமதுகரம் குலவியமலர்மகள் *
காதல்செய்கணபுரம் அடிகள்தம்இடமே.
1712 தொண்டரும்அமரரும் முனிவரும்தொழுதெழ *
அண்டமொடுஅகலிடம் அளந்தவர்அமர்செய்து *
விண்டவர்பட மதிளிலங்கைமுன்எரியெழ *
கண்டவர்கணபுரம் அடிகள்தம்இடமே.
1713 மழுவியல்படையுடையவனிடம் மழைமுகில் *
தழுவியஉருவினர் திருமகள்மருவிய *
கொழுவியசெழுமலர் முழுசியபறவைபண் *
எழுவியகணபுரம் அடிகள்தம்இடமே.
1714 பரிதியொடுஅணிமதி பனிவரைதிசைநிலம் *
எரிதியொடெனவின இயல்வினர்செலவினர் *
சுருதியொடுஅருமறை முறைசொலும்அடியவர் *
கருதியகணபுரம் அடிகள்தம்இடமே.
1715 படிபுல்கும்அடியிணை பலர்தொழ, மலர்வைகு *
கொடிபுல்குதடவரை யகலமதுடையவர் *
முடிபுல்குநெடுவயல் படைசெல அடிமலர் *
கடிபுல்குகணபுரம் அடிகள்தம்இடமே.
1716 புலமனுமலர்மிசை மலர்மகள்புணரிய *
நிலமகளென இனமகளிர்களிவரொடும் *
வலமனுபடையுடை மணிவணர், நிதிகுவை *
கலமனுகணபுரம் அடிகள்தம்இடமே.
1717 மலிபுகழ்கணபுரமுடைய எம்அடிகளை *
வலிகெழுமதிளயல் வயலணிமங்கையர் *
கலியனதமிழிவை விழுமியவிசையினொடு *
ஒலிசொலும்அடியவர் உறுதுயரிலரே. (2)