Your browser does not support the audio element.
audio
1488 கலங்கமுந்நீர்கடைந்து அமுதங்கொண்டு * இமையோர்
துலங்கல்தீரநல்கு சோதிச்சுடராய *
வலங்கையாழிஇடங்கைச்சங்கம் உடையானூர் *
நலங்கொள்வாய்மை அந்தணர்வாழும்நறையூரே. (2)
1489 முனையார்சீயமாகி அவுணன்முரண்மார்வம் *
புனைவாளுகிரால் போழ்படஈர்ந்தபுனிதனூர் *
சினையார்தேமாஞ்செந்தளிர்கோதிக் குயில்கூவும் *
நனையார்சோலைசூழ்ந்து அழகாயநறையூரே.
1490 ஆனைப்புரவி தேரொடுகாலாளணிகொண்ட *
சேனைத்தொகையைச்சாடி இலங்கைசெற்றானூர் *
மீனைத்தழுவிவீழ்ந்தெழும் மள்ளர்க்குஅலமந்து *
நானப்புதலில் ஆமையொளிக்கும்நறையூரே.
1491 உறியார்வெண்ணெயுண்டு உரலோடும்கட்டுண்டு *
வெறியார்கூந்தல்பின்னைபொருட்டு ஆன்வென்றானூர் *
பொறியார்மஞ்ஞை பூம்பொழில்தோறும்நடமாட *
நறுநாண்மலர்மேல் வண்டுஇசைபாடும்நறையூரே.
1492 விடையேழ்வென்று மென்தோளாய்ச்சிக்குஅன்பனாய் *
நடையால்நின்றமருதம்சாய்த்த நாதனூர் *
பெடையோடுஅன்னம் பெய்வளையார்தம்பின்சென்று *
நடையோடியலி நாணியொளிக்கும்நறையூரே.
1493 பகுவாய்வன்பேய்கொங்கைசுவைத்து ஆருயிருண்டு *
புகுவாய்நின்ற போதகம்வீழப்பொருதானூர் *
நெகுவாய்நெய்தற்பூமதுமாந்திக் கமலத்தின் *
நகுவாய்மலர்மேல் அன்னமுறங்கும்நறையூரே.
1494 முந்துநூலும்முப்புரிநூலும் முன்னீந்த *
அந்தணாளன்பிள்ளையை அஞ்ஞான்றுஅளித்தானூர் *
பொந்தில்வாழும் பிள்ளைக்காகிப் புள்ளோடி *
நந்துவாரும் பைம்புனல்வாவிநறையூரே.
1495 வெள்ளைப்புரவைத்தேர்விசயற்காய் விறல்வியூகம்
விள்ள * சிந்துக்கோன்விழஊர்ந்த விமலனூர் *
கொள்ளைக்கொழுமீ னுண்குருகுஓடிப்பெடையோடும் *
நள்ளக்கமலத்தேறலுகுக்கும் நறையூரே.
1496 பாரையூரும்பாரந்தீரப் பார்த்தன்தன்
தேரையூரும் * தேவதேவன்சேருமூர் *
தாரையூரும் தண்தளிர்வேலி புடைசூழ *
நாரையூரும் நல்வயல்சூழ்ந்தநறையூரே. (2)
1497 தாமத்துளப நீண்முடிமாயன்தான்நின்ற *
நாமத்திரள்மாமாளிகைசூழ்ந்த நறையூர்மேல் *
காமக்கதிர்வேல்வல்லான் கலியனொலிமாலை *
சேமத்துணையாம் செப்புமவர்க்குத்திருமாலே. (2)