Chapter 8

Thiruvarangam 5 - (ஏழை ஏதலன்)

திருவரங்கம் 5
Thiruvarangam 5 - (ஏழை ஏதலன்)
The āzhvār prays to Lord Ranganatha, asking that he too may be the recipient of the Lord's divine grace, just like Guhan, Hanuman, Gajendra, Suman, Govinda Swami, Markandeya, Sandipani, Vaidhika, and Tondaiman.
குகன், அனுமன், கஜேந்திரன், சுமுகன்,கோவிந்தசுவாமி மார்க்கண்டேயன், ஸாந்தீபினி, வைதிகன், தொண்டை மன்னன் ஆகியோர் தேவரீருடைய திருவருளுக்கு இலக்கானது போல் அடியேனும் ஆகவேண்டும் என்று ஆழ்வார் அரங்கனிடம் வேண்டுகிறார்.
Verses: 1418 to 1427
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Will not get affected by the results of karma
  • PT 5.8.1
    1418 ## ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது
    இரங்கி * மற்று அவற்கு இன் அருள் சுரந்து *
    மாழை மான் மட நோக்கி உன் தோழி *
    உம்பி எம்பி என்று ஒழிந்திலை ** உகந்து
    தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற
    சொற்கள் வந்து * அடியேன் மனத்து இருந்திட *
    ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் *
    அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 1
  • PT 5.8.2
    1419 வாத மா மகன் மர்க்கடம் விலங்கு *
    மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை * உகந்து
    காதல் ஆதரம் கடலினும் பெருகச் *
    செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு ** என்று
    கோது இல் வாய்மையினாயொடும் உடனே *
    உண்பன் நான் என்ற ஒண் பொருள் * எனக்கும்
    ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் *
    அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 2
  • PT 5.8.3
    1420 கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை *
    வைகு தாமரை வாங்கிய வேழம் *
    முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை
    பற்ற * மற்று அது நின் சரண் நினைப்ப **
    கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் *
    கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து * உன்
    அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் *
    அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 3
  • PT 5.8.4
    1421 நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம் *
    வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய் *
    நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு *
    அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து **
    வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர் *
    கொடிய செய்வன உள * அதற்கு அடியேன்
    அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன் *
    அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 4
  • PT 5.8.5
    1422 மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் *
    மலர் அடி கண்ட மா மறையாளன் *
    தோகை மா மயில் அன்னவர் இன்பம் *
    துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து **
    போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே *
    போதுவாய் என்ற பொன் அருள் * எனக்கும்
    ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் *
    அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 5
  • PT 5.8.6
    1423 மன்னு நான்மறை மா முனி பெற்ற
    மைந்தனை * மதியாத வெம் கூற்றம்
    தன்னை அஞ்சி * நின் சரண் என சரண் ஆய்த் *
    தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா **
    பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் *
    எண்ணிய பேர் அருள் * எனக்கும்
    அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் *
    அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 6
  • PT 5.8.7
    1424 ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் *
    உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் *
    காதல் என் மகன் புகல் இடம் காணேன் *
    கண்டு நீ தருவாய் எனக்கு என்று **
    கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய *
    குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய் *
    ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் *
    அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 7
  • PT 5.8.8
    1425 வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் *
    எந்தை நின் சரண் என்னுடை மனைவி *
    காதல் மக்களைப் பயத்தலும் காணாள் *
    கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப **
    ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச் செய்து *
    உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் *
    ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் *
    அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 8
  • PT 5.8.9
    1426 துளங்கு நீள் முடி அரசர் தம் குரிசில் *
    தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு *
    உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து * அங்கு
    ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப *
    வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்
    செய்த ஆறு * அடியேன் அறிந்து * உலகம்
    அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் *
    அணி பொழில் திருவரங்கத்து அம்மானே 9
  • PT 5.8.10
    1427 ## மாட மாளிகை சூழ் திருமங்கை
    மன்னன் * ஒன்னலர் தங்களை வெல்லும் *
    ஆடல்மா வலவன் கலிகன்றி *
    அணி பொழில் திருவரங்கத்து அம்மானை **
    நீடு தொல் புகழ் ஆழி வல்லானை *
    எந்தையை நெடுமாலை நினைந்த *
    பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்
    பாட * நும்மிடைப் பாவம் நில்லாவே 10