Your browser does not support the audio element.
audio
1398 கைம்மானமழகளிற்றைக் கடல்கிடந்தகருமணியை *
மைம்மானமரதகத்தை மறையுரைத்ததிருமாலை *
எம்மானைஎனக்குஎன்றும்இனியானைப் பனிகாத்த
அம்மானை * யான்கண்டது அணிநீர்த்தென்னரங்கத்தே. (2)
1399 பேரானைக் குறுங்குடியெம்பெருமானை * திருதண்கா
லூரானைக் கரம்பனூருத்தமனை * முத்திலங்கு
காரார்திண்கடலேழும் மலையேழிவ்வுலகேழுண்டும் *
ஆராதென்றிருந்தானைக் கண்டதுதென்னரங்கத்தே. (2)
1400 ஏனாகிஉலகிடந்து அன்றிருநிலனும்பெருவிசும்பும் *
தானாயபெருமானைத் தன்னடியார்மனத்துஎன்றும் *
தேனாகியமுதாகித்திகழ்ந்தானை * மகிழ்ந்துஒருகால்
ஆனாயனானைக் கண்டதுதென்னரங்கத்தே.
1401 வளர்ந்தவனைத்தடங்கடலுள் வலியுருவில்திரிசகடம் *
தளர்ந்துதிரஉதைத்தவனைத் தரியாதுஅன்றுஇரணியனைப்
பிளந்தவனை * பெருநிலம்ஈரடிநீட்டிப் பண்டொருநாள்
அளந்தவனை * யான்கண்டது அணிநீர்த் தென்னரங்கத்தே.
1402 நீரழலாய் நெடுநிலனாய்நின்றானை * அன்று அரக்க
னூர் அழலாலுண்டானைக் கண்டார்பின்காணாமே *
பேரழலாய்ப்பெருவிசும்பாய்ப் பின்மறையோர் மந்திரத்தின் *
ஆரழலால்உண்டானைக் கண்டதுதென்னரங்கத்தே.
1403 தஞ்சினத்தைத்தவிர்த்தடைந்தார் தவநெறியை * தரியாது
கஞ்சனைக்கொன்று அன்றுஉலகமுண்டுஉமிழ்ந்த கற்பகத்தை *
வெஞ்சினத்தகொடுந்தொழிலோன் விசையுருவை அசைவித்த *
அஞ்சிறைப்புட்பாகனை யான்கண்டதுதென்னரங்கத்தே.
1404 சிந்தனையைத்தவநெறியைத் திருமாலை * பிரியாது
வந்துஎனதுமனத்துஇருந்த வடமலையை * வரிவண்டார்
கொந்தணைந்தபொழில்கோவல் உலகளப்பான் அடிநிமிர்த்த
அந்தணனை * யான்கண்டது அணிநீர்த்தென்னரங்கத்தே. (2)
1405 துவரித்தஉடையார்க்கும் தூய்மையில்லாச்சமணர்க்கும் *
அவர்கட்குஅங்குஅருளில்லா அருளானை * தன்னடைந்த
எமர்கட்கும்அடியேற்கும் எம்மாற்கும்எம்மனைக்கும் *
அமரர்க்கும்பிரானாரைக் கண்டதுதென்னரங்கத்தே.
1406 பொய்வண்ணம்மனத்தகற்றிப் புலனைந்தும்செலவைத்து *
மெய்வண்ணம்நினைந்தவர்க்கு மெய்ந்நின்றவித்தகனை *
மைவண்ணம்கருமுகில்போல் திகழ்வண்ணமரதகத்தின் *
அவ்வண்ணவண்ணனை யான்கண்டதுதென்னரங்கத்தே.
1407 ஆமருவிநிரைமேய்த்த அணியரங்கத்தம்மானை *
காமருசீர்க்கலிகன்றி ஒலிசெய்தமலிபுகழ்சேர் *
நாமருவுதமிழ்மாலை நாலிரண்டோடிரண்டினையும் *
தாமருவிவல்லார்மேல் சாரா தீவினைதானே. (2)