Chapter 8
Thirunāngur Thirumanimādakkovil - (நந்தா விளக்கே)
திருநாங்கூர் மணிமாடக்கோயில்
In the Chola Nadu region, within the Tanjavur district, seven miles from Sirkazhi lies Thirunangur. Among the 108 Divya Desams, eleven are located in the Thirunangur area. This verse pertains to the Lord residing in the Manimada Kovil, one of the Divya Desams in Thirunangur.
சோழ நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் சீர்காழிக்கு ஏழு கல் தொலைவில் திருநாங்கூர் இருக்கிறது. நூற்றெட்டு திவ்வியதேசங்களுள் அடங்கிய பதினொரு திவ்வியதேசங்கள் திருநாங்கூர்ப் பகுதியில் இருக்கின்றன. அவற்றுள் மணிமாடக் கோயிலில் இருக்கும் எம்பெருமானைப் பற்றியது இப்பாசுரம்.
Verses: 1218 to 1227
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: இந்தளம்
Recital benefits: Will rule the world surrounded by sounding oceans under a white umbrella and become gods
- PT 3.8.1
1218 ## நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் *
நர நாரணனே கரு மா முகில்போல்
எந்தாய் * எமக்கே அருளாய் என நின்று *
இமையோர் பரவும் இடம் ** எத் திசையும்
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே *
களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து *
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 1 - PT 3.8.2
1219 முதலைத் தனி மா முரண் தீர அன்று *
முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய *
விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி *
வினை தீர்த்த அம்மான் இடம் ** விண் அணவும்
பதலைக்க போதத்து ஒளி மாட நெற்றிப் *
பவளக் கொழுங் கால பைங் கால் புறவம் *
மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 2 - PT 3.8.3
1220 கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய * அன்று
கொடு மா முதலைக்கு இடர்செய்து * கொங்கு ஆர்
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு **
அணைந்திட்ட அம்மான் இடம் * ஆள் அரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் *
அணி முத்தும் வெண் சாமரையோடு * பொன்னி
மலைப் பண்டம் அண்ட திரை உந்து நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 3 - PT 3.8.4
1221 சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி * அன்று
திசை நான்கும் நான்கும் இரிய * செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடியக் *
கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான் **
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர் *
ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர் *
மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 4 - PT 3.8.5
1222 இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு *
இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து *
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்துத் *
தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம் தான் **
குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே *
குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு *
மழை ஆடு சோலை மயில் ஆலு நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 5 - PT 3.8.6
1223 பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் *
பகு வாய்க் கழுதுக்கு இரங்காது * அவள் தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் *
உடனே சுவைத்தான் இடம் ** ஓங்கு பைந் தாள்
கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகிக் *
கழுநீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து *
மண் ஏந்து இள மேதிகள் வைகு நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 6 - PT 3.8.7
1224 தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத் *
தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் *
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன்மேல் *
அடி வைத்த அம்மான் இடம் ** மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் *
செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று * முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 7 - PT 3.8.8
1225 துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் *
துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் * முற்றா
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் *
விளைவித்த அம்மான் இடம் ** வேல் நெடுங் கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று *
மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல் *
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 8 - PT 3.8.9
1226 விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த *
விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும் *
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று *
இமையோர் பரவும் இடம் ** பைந் தடத்துப்
பெடையோடு செங் கால அன்னம் துகைப்பத் *
தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர் *
மடை ஓட நின்று மது விம்மு நாங்கூர் *
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே 9 - PT 3.8.10
1227 ## வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர் *
மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு * என்றும்
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர் கோன் *
கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் **
கண்டார் வணங்கக் களி யானை மீதே *
கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய் *
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் *
விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே 10