Your browser does not support the audio element.
audio
1208 கள்வன்கொல்? யான்அறியேன்கரியானொரு காளைவந்து *
வள்ளிமருங்குல் என்தன் மடமானினைப் போதவென்று *
வெள்ளிவளைக்கை பற்றப் பெற்ற தாயரை விட்டகன்று *
அள்ளலம்பூங்கழனி அணியாலிபுகுவர்கொலோ? (2)
1209 பண்டு இவன் ஆயன்நங்காய்! படிறன் புகுந்து * என்மகள்தன்
தொண்டையஞ்செங்கனிவாய் நுகர்ந்தானை உகந்து * அவன் பின்
கெண்டையொண்கண்மிளிரக் கிளிபோல்மிழற்றி நடந்து *
வண்டமர்கானல்மல்கும் வயலாலி புகுவர்கொலோ?
1210 அஞ்சுவன்வெஞ்சொல்நங்காய்! அரக்கர் குலப்பாவை தன்னை *
வெஞ்சினமூக்கரிந்த விறலோன் திறம்கேட்கில் * மெய்யே
பஞ்சியல்மெல்லடி எம்பணைத்தோளி பரக்கழிந்து *
வஞ்சியந்தண்பணைசூழ் வயலாலிபுகுவர்கொலோ?
1211 ஏது அவன் தொல்பிறப்பு? இளையவன் வளையூதி * மன்னர்
தூதுவனாயவனூர் சொலுவீர்கள்! சொலீர்அறியேன் *
மாதவன் தன்துணையாநடந்தாள் தடம்சூழ்புறவில் *
போதுவண்டாடுசெம்மல் புனலாலி புகுவர்கொலோ?
1212 தாய்எனையென்று இரங்காள் தடந்தோளிதனக்கமைந்த *
மாயனை, மாதவனை மதித்து என்னை யகன்ற இவள் *
வேயனதோள்விசிறிப் பெடையன்னமெனநடந்து *
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர்கொலோ?
1213 எந்துணையென்றுஎடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் *
தன்துணையாய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் *
வன்துணைவானவர்க்காய் வரம்செற்று * அரங்கத்து உறையும்
இன்துணைவன்னொடும்போய் எழிலாலி புகுவர்கொலோ?. (2)
1214 அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள் *
பின்னைதன் கா தலன்தன் பெருந்தோள்நலம் பேணினளால் *
மின்னையும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து *
புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர்கொலோ?
1215 முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும், பேசுகின்ற *
சிற்றில்மென்பூவையும்விட்டகன்ற செழுங்கோதை தன்னைப் *
பெற்றிலேன் முற்றிழையை, பிறப்பிலிபின்னே நடந்து *
மற்றெல்லாம் கைதொழப்போய் வயலாலி புகுவர்கொலோ?
1216 காவியங்கண்ணி எண்ணில் கடிமாமலர்ப்பாவை யொப்பாள் *
பாவியேன் பெற்றமையால் பணைத்தோளிபரக்கழிந்து *
தூவிசேரன்னமன்னநடையாள் நெடுமாலொடும் போய் *
வாவியந்தண்பணைசூழ் வயலாலி புகுவர்கொலோ?
1217 தாய்மனம்நின்றிரங்கத்தனியே நெடுமால்துணையா *
போயினபூங்கொடியாள் புனலாலி புகுவரென்று *
காய்சினவேல்கலியன் ஒலிசெய்தமிழ்மாலைபத்தும் *
மேவியநெஞ்சுடையார் தஞ்சமாவதுவிண்ணுலகே. (2)