Your browser does not support the audio element.
audio
668 மெய்யில்வாழ்க்கையை மெய்யெனக்கொள்ளும் * இவ்
வையந்தன்னொடும் கூடுவதில்லையான் *
ஐயனேஅரங்கா என்றழைக்கின்றேன் *
மையல்கொண்டொழிந்தேன் என்தன்மாலுக்கே. (2)
669 நூலினேரிடையார்திறத்தே நிற்கும் *
ஞாலந்தன்னொடும் கூடுவதில்லையான் *
ஆலியாஅழையா அரங்கா! என்று *
மாலெழுந்தொழிந்தேன் என்தன்மாலுக்கே.
670 மாரனார்வரிவெஞ்சிலைக் காட்செய்யும் *
பாரினாரொடும் கூடுவதில்லையான் *
ஆரமார்வன் அரங்கனனந்தன் * நல்
நாரணன் நரகாந்தகன்பித்தனே.
671 உண்டியேயுடையே யுகந்தோடும் * இம்
மண்டலத்தொடும் கூடுவதில்லையான் *
அண்டவாணன் அரங்கன் * வன்பேய்முலை
உண்டவாயன்தன் உன்மத்தன்காண்மினே.
672 தீதில்நன்னெறிநிற்கஅல்லாதுசெய் *
நீதியாரொடும் கூடுவதில்லையான் *
ஆதிஆயன் அரங்கன் * அந்தாமரைப்
பேதைமாமணவாளன்றன் பித்தனே.
673 எம்பரத்தரல்லாரொடும் கூடலன் *
உம்பர்வாழ்வை ஒன்றாகக்கருதிலன் *
தம்பிரானமரர்க்கு * அரங்கநகர்
எம்பிரானுக்கு எழுமையுமபித்தனே.
674 எத்திறத்திலும் யாரொடும்கூடும் * அச்
சித்தந்தன்னைத்தவிர்த்தனன் செங்கண்மால் *
அத்தனே! அரங்கா! என்றழைக்கின்றேன் *
பித்தனாயொழிந்தேன் எம்பிரானுக்கே.
675 பேயரே எனக்குயாவரும் * யானுமோர்
பேயனேஎவர்க்கும் இதுபேசியென்? *
ஆயனேஅரங்கா என்றழைக்கின்றேன் *
பேயனாயொழிந்தேன் எம்பிரானுக்கே.
676 அங்கையாழி அரங்கனடியிணை *
தங்குசிந்தைத் தனிப்பெரும்பித்தனாய் *
கொங்கர்கோன் குலசேகரன்சொன்னசொல் *
இங்குவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. (2)