Your browser does not support the audio element.
audio
328 கதிராயிரமிரவி கலந்தெறித்தாலொத்தநீள்முடியன் *
எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல் *
அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்து * அரியாய்
உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர். (2)
329 நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம் *
ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல் *
காந்தள்முகிழ்விரல்சீதைக்காகிக் கடுஞ்சிலைசென்றிறுக்க *
வேந்தர்தலைவன்சனகராசன்தன் வேள்வியிற்கண்டாருளர்.
330 கொலையானைக்கொம்புபறித்துக் கூடலர்சேனைபொருதழிய *
சிலையால்மராமரமெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் *
தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப *
அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர்.
331 தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட *
மாயக்குழவியதனைநாடுறில் வம்மின்சுவடுரைக்கேன் *
ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும் *
வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர்.
332 நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் * முறையால்
சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல் *
வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு
தேரேற்றி * சேனைநடுவுபோர்செய்யச் சிக்கெனக்கண்டாருளர்.
333 பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க
வல்லானை * மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல் *
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை *
எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர்.
334 வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன் *
உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன் *
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று *
கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர்.
335 நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே *
நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன் *
ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்பச் சயத்திரதன்தலையை *
பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர்.
336 மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம் *
திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் *
எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து *
வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர்.
337 கரியமுகில்புரைமேனிமாயனைக் கண்டசுவடுரைத்து *
புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை *
திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும் *
பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே. (2)