Your browser does not support the audio element.
audio
338 அலம்பாவெருட்டாக்கொன்று திரியுமரக்கரை *
குலம்பாழ்படுத்துக் குலவிளக்காய்நின்றகோன்மலை *
சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர் *
சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. (2)
339 வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் * தங்கை
பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை *
எல்லாவிடத்திலும் எங்கும்பரந்து * பல்லாண்டொலி
செல்லாநிற்கும்சீர்த் தென்திருமாலிருஞ்சோலையே.
340 தக்கார்மிக்கார்களைச் சஞ்சலம்செய்யும்சலவரை *
தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை *
எக்காலமும்சென்று சேவித்திருக்குமடியரை *
அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே.
341 ஆனாயர்கூடி அமைத்தவிழவை * அமரர்தம்
கோனார்க்கொழியக் கோவர்த்தனத்துச்செய்தான்மலை *
வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி *
தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே.
342 ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் * கஞ்சன்தன்
ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை *
கருவாரணம் தன்பிடிதுறந்தோட * கடல்வண்ணன்
திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே.
343 ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை *
சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை *
ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும் *
சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே.
344 மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல் *
முன்னங்குநின்று மோழையெழுவித்தவன்மலை *
கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன் *
தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே.
345 குறுகாதமன்னரைக் கூடுகலக்கி * வெங்கானிடைச்
சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை *
அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி *
சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே.
346 சிந்தப்புடைத்துச் செங்குருதிகொண்டு * பூதங்கள்
அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை *
இந்திரகோபங்கள் எம்பெருமான்கனிவாயொப்பான் *
சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே.
347 எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார் *
விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை *
பட்டிப்பிடிகள் பகடுரிஞ்சிச்சென்று * மாலைவாய்த்
தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே.
348 மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை *
கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை *
விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல் *
கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பரே . (2)