Your browser does not support the audio element.
audio
192 இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம் *
மந்திரமாமலர்கொண்டு மறைந்துவராய்வந்துநின்றார் *
சந்திரன்மாளிகைசேரும் சதுரர்கள்வெள்ளறைநின்றாய் *
அந்தியம்போதுஇதுவாகும் அழகனே! காப்பிடவாராய். (2)
193 கன்றுகள்இல்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம் *
நின்றொழிந்தேன்உன்னைக்கூவி நேசமேலொன்றுமிலாதாய்! *
மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்திருவெள்ளறைநின்றாய்! *
நன்றுகண்டாய்என்தன்சொல்லு நான்உன்னைக்காப்பிடவாராய்.
194 செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு *
அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய்! *
முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறைநின்றாய்! *
இப்போதுநான்ஒன்றும்செய்யேன் எம்பிரான்! காப்பிடவாராய்.
195 கண்ணில்மணல்கொடுதூவிக் காலினால்பாய்ந்தனையென்றென்று *
எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால்முறைப்படுகின்றார் *
கண்ணனே! வெள்ளறைநின்றாய்! கண்டாரோடேதீமைசெய்வாய்! *
வண்ணமேவேலையதொப்பாய்! வள்ளலே! காப்பிடவாராய்.
196 பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார் *
எல்லாம்உன்மேலன்றிப்போகாது எம்பிரான்! நீஇங்கேவாராய் *
நல்லார்கள்வெள்ளறைநின்றாய்! ஞானச்சுடரே! உன்மேனி *
சொல்லாரவாழ்த்திநின்றேத்திச் சொப்படக்காப்பிடவாராய்.
197 கஞ்சன்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை *
வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையும்உண்டு *
மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய்! *
அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே! காப்பிடவாராய்.
198 கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த *
பிள்ளையரசே! நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை *
உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய்! *
பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே. காப்பிடவாராய்.
199 இன்பமதனைஉயர்த்தாய்! இமையவர்க்குஎன்றும்அரியாய்! *
கும்பக்களிறட்டகோவே! கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே! *
செம்பொன்மதிள்வெள்ளறையாய்! செல்வத்தினால்வளர்பிள்ளாய்! *
கம்பக்கபாலிகாண்அங்குக் கடிதோடிக்காப்பிடவாராய்.
200 இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார் *
தருக்கேல்நம்பி! சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள் *
திருக்காப்புநான்உன்னைச்சாத்தத் தேசுடைவெள்ளறைநின்றாய்! *
உருக்காட்டும்அந்திவிளக்கு இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய்.
201 போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை *
மாதர்க்குயர்ந்தஅசோதை மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம் *
வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை *
பாதப்பயன்கொள்ளவல்ல பத்தருள்ளார்வினைபோமே. (2)