Your browser does not support the audio element.
audio
182 ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய் *
கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட *
பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப *
தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். (2)
183 கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும் கண்கள் *
உருவுடையாய்! உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்! *
திருவுடையாள்மணவாளா! திருவரங்கத்தேகிடந்தாய்! *
மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய்.
184 மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு *
கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி *
நிச்சலும்தீமைகள்செய்வாய்! நீள்திருவேங்கடத்துஎந்தாய்! *
பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய்.
185 தெருவின்கண்நின்று இளவாய்ச்சிமார்களைத் தீமைசெய்யாதே *
மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற *
புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே *
உருவமழகியநம்பீ! உகந்திவைசூட்டநீவாராய்.
186 புள்ளினைவாய்பிளந்திட்டாய்! பொருகரியின் கொம்பொசித்தாய்! *
கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய்! *
அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன் *
தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய்.
187 எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்காண்நம்பி!
கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்! *
தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு *
பொருதுவருகின்றபொன்னே! புன்னைப்பூச்சூட்டவாராய்.
188 குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎம்கோவே! *
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா! *
இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்! *
குடந்தைக்கிடந்தஎம்கோவே! குருக்கத்திப்பூச்சூட்டவாராய்.
189 சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்! *
சாமாறுஅவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய்! *
ஆமாறறியும்பிரானே! அணியரங்கத்தேகிடந்தாய்! *
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய்! இருவாட்சிப்பூச்சூட்டவாராய்.
190 அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய் *
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய். தூமலராள் மணவாளா! *
உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய்! *
கண்டுநான்உன்னையுகக்கக் கருமுகைப்பூச்சூட்டவாராய்.
191 செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி *
எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று *
மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை *
பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே. (2)