Your browser does not support the audio element.
audio
577 விண்ணீலமேலாப்பு விரித்தாற்போல்மேகங்காள்! *
தெண்ணீர்பாய்வேங்கடத்து என் திருமாலும்போந்தானே? *
கண்ணீர்கள்முலைக்குவட்டில் துளிசோரச்சோர்வேனை *
பெண்ணீர்மையீடழிக்கும் இது தமக்கோர்பெருமையே. (2)
578 மாமுத்தநிதிசொரியும் மாமுகில்காள்! * வேங்கடத்துச்
சாமத்தினிறங்கொண்ட தாளாளன்வார்த்தையென்னே *
காமத்தீயுள்புகுந்து கதுவப்பட்டிடைக்கங்குல் *
ஏமத்தோர்தென்றலுக்கு இங்கிலக்காய்நானிருப்பேனே.
579 ஒளிவண்ணம்வளைசிந்தை உறக்கத்தோடிவையெல்லாம் *
எளிமையாலிட்டென்னை ஈடழியப்போயினவால் *
குளிரருவிவேங்கடத்து என்கோவிந்தன்குணம்பாடி *
அளியத்தமேகங்காள்! ஆவிகாத்திருப்பேனே.
580 மின்னாகத்தெழுகின்ற மேகங்காள்! * வேங்கடத்துத்
தன்னாகத்திருமங்கை தங்கியசீர்மார்வற்கு *
என்னாகத்திளங்கொங்கை விரும்பித்தாம்நாள்தோறும் *
பொன்னாகம்புல்குதற்கு என்புரிவுடைமைசெப்புமினே.
581 வான்கொண்டுகிளர்ந்தெழுந்த மாமுகில்காள்! * வேங்கடத்துத்
தேன்கொண்டமலர்ச்சிதறத் திரண்டேறிப்பொழிவீர்காள்! *
ஊன்கொண்டவள்ளுகிரால் இரணியனையுடலிடந்தான் *
தான்கொண்டசரிவளைகள் தருமாகில்சாற்றுமினே.
582 சலங்கொண்டுகிளர்ந்தெழுந்த தண்முகில்காள்! * மாவலியை
நிலங்கொண்டான்வேங்கடத்தே நிரந்தேறிப்பொழிவீர்காள் *
உலங்குண்டவிளங்கனிபோல் உள்மெலியப்புகுந்து * என்னை
நலங்கொண்டநாரணற்கு என்நடலைநோய்செப்புமினே.
583 ## சங்கமாகடல்கடைந்தான் தண்முகில்காள்! * வேங்கடத்துச்
செங்கண்மால்சேவடிக்கீழ் அடிவீழ்ச்சிவிண்ணப்பம் *
கொங்கைமேல்குங்குமத்தின் குழம்பழியப்புகுந்து * ஒருநாள்
தங்குமேல் என்னாவிதங்குமென்றுஉரையீரே. (2)
584 கார்காலத்தெழுகின்ற கார்முகில்காள்! * வேங்கடத்துப்
போர்காலத்தெழுந்தருளிப் பொருதவனார்பேர்சொல்லி *
நீர்காலத் தெருக்கில் அம்பழவிலைபோல்வீழ்வேனை *
வார்காலத்தொருநாள் தம்வாசகம்தந்தருளாரே.
585 மதயானைபோலெழுந்த மாமுகில்காள் * வேங்கடத்தைப்
பதியாகவாழ்வீர்காள்! பாம்பணையான்வார்த்தையென்னே! *
கதியென்றும்தானாவான் கருதாது * ஓர்பெண்கொடியை
வதைசெய்தான்என்னும்சொல் வையகத்தார்மதியாரே. (2)
586 நாகத்தினணையானை நன்னுதலாள்நயந்துரைசெய் *
மேகத்தைவேங்கடக்கோன் விடுதூதில்விண்ணப்பம் *
போகத்தில்வழுவாத புதுவையர்கோன்கோதைதமிழ் *
ஆகத்துவைத்துரைப்பார் அவரடியாராகுவரே. (2)