Your browser does not support the audio element.
audio
3651 கருமாணிக்கமலைமேல் மணித்தடந்தாமரைக் காடுகள்போல் *
திருமார்வுவாய்கண்கை உந்திகாலுடையாடைகள்செய்ய பிரான் *
திருமாலெம்மான்செழுநீர்வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர் *
அருமாயன்பேரன்றிப்பேச்சிலள் அன்னைமீர்! இதற்கென்செய்கேனா? (2)
3652 அன்னைமீர்! இதற்கென்செய்கேன்?அணிமேருவின் மீதுலவும் *
துன்னுசூழ்சுடர்ஞாயிறும் அன்றியும்பல்சுடர்களும்போல் *
மின்னுநீள்முடியாரம் பல்கலன்றானுடையெம்பெருமான் *
புன்னையம்பொழில்சூழ் திருப்புலியூர்புகழுமிவளே.
3653 புகழுமிவள்நின்றிராப்பகல் பொருநீர்க்கடல்தீப்பட்டு * எங்கும்
திகழுமெரியொடுசெல்வதொப்பச் செழுங்கதிராழிமுதல் *
புகழும்பொருபடையேந்திப் போர்புக்கசுரரைப்பொன்று வித்தான் *
திகழுமணிநெடுமாடநீடு திருப்பூலியுர்வளமே.
3654 ஊர்வளம்கிளர்சோலையும் கரும்பும்பெருஞ்செந்நெலும் சூழ்ந்து *
ஏர்வளம்கிளர்தண்பணைக் குட்டநாட்டுத்திருப்பூலியுர் *
சீர்வளம்கிளர் மூவுலகுண்டுமிழ் தேவபிரான் *
பேர்வளம்கிளர்ந்தன்றிப்பேச்சிலள் இன்றுஇப்புனை யிழையே.
3655 புனையிழைகளணிவும் ஆடையுடையும்புதுக்கணிப்பும் *
நினையும்நீர்மையதன்றுஇவட்குஇது நின்றுநினைக்கப்புக்கால் *
சுனையினுள்தடந்தாமரை மலரும்தண்திருப்புலியுர் *
முனைவன்மூவுலகாளி அப்பன் திருவருள்மூழ்கினளே.
3656 திருவருள்மூழ்கிவைகலும் செழுநீர்நிறக்கண்ணபிரான் *
திருவருள்களும்சேர்ந்தமைக்கு அடையாளம்திருந்தவுள *
திருவருளருளால் அவன்சென்றுசேர்தண்திருப்பூலியூர் *
திருவருள்கமுகொண்பழத்தது மெல்லியல்செவ்விதழே.
3657 மெல்லிலைச்செல்வவண்கொடிபுல்க வீங்கிளந்தாள் கமுகின் *
மல்லிலைமடல்வாழைஈங்கனிசூழ்ந்து மணம்கமழ்ந்து *
புல்லிலைத்தெங்கினூடு காலுலவும்தண்திருப்பூலியுர் *
மல்லலஞ்செல்வக்கண்ணன் தாளடைந்தாள் இம்மடவரலே.
3658 மடவரலன்னைமீர்கட்கு என்சொல்லிச்சொல்லுகேன்? * மல்லைச்செல்வ
வடமொழிமறைவாணர் வேள்வியுள்நெய்யழல்வான் புகைபோய் *
திடவிசும்பிலமரர்நாட்டைமறைக்கும் தண்திருப்பூலியுர் *
படவரவணையான்தன்நாமமல்லால் பரவாளிவளே.
3659 பரவாளிவள்நின்றிராப்பகல் பனிநீர்நிறக்கண்ணபிரான் *
விரவாரிசைமறைவேதியரொலி வேலையின்நின்றொலிப்ப *
கரவார்தடந்தொறும்தாமரைக்கயம் தீவிகைநின்றலரும் *
புரவார்கழனிகள்சூழ் திருப்புலியூர்ப்புகழன்றிமற்றே.
3660 அன்றிமற்றோருபாயமென்? இவளந்தண்துழாய்கமழ்தல் *
குன்றமாமணிமாடமாளிகைக் கோலக்குழாங்கள்மல்கி *
தென்திசைத்திலதம்புரை குட்டநாட்டுத்திருப்பூலியுர் *
நின்றமாயப்பிரான்திருவருளாம் இவள்நேர்ப்பட்டதே.
3661 நேர்பட்டநிறைமூவுலகுக்கும்
நாயகன்தன்னடிமை *
நேர்பட்டதொண்டர்தொண்டர்தொண்டர்
தொண்டன் சடகோபன் * சொல்
நேர்பட்டதமிழ்மாலை ஆயிரத்துள் இவைபத்தும்
நேர்பட்டாரவர் * நேர்ப்பட்டார்
நெடுமாற்கடிமை செய்யவே. (2)