Your browser does not support the audio element.
audio
3486 ஆழியெழச் சங்கும்வில்லுமெழ * திசை
வாழியெழத் தண்டும்வாளுமெழ * அண்டம்
மோழையெழ முடிபாதமெழ * அப்பன்
ஊழியெழ உலகங்கொண்டவாறே. (2)
3487 ஆறுமலைக்கு எதிர்ந்தோடுமொலி * அர
வூறுசுலாய் மலைதேய்க்குமொலி * கடல்
மாறுசுழன்று அழைக்கின்றவொலி * அப்பன்
சாறுபட அமுதங்கொண்டநான்றே.
3488 நான்றில ஏழ்மண்ணும்தானத்தவே * பின்னும்
நான்றில ஏழ்மலைதானத்தவே * பின்னும்
நான்றில ஏழ்கடல்தானத்தவே * அப்பன்
ஊன்றியிடந்து எயிற்றில்கொண்டநாளே.
3489 நாளுமெழ நிலநீருமெழ * விண்ணும்
கோளுமெழே எரிகாலுமெழ * மலை
தாளுமெழச் சுடர்தானுமெழ * அப்பன்
ஊளியெழ உலகமுண்டவூணே.
3490 ஊணுடைமல்லர் ததர்ந்தவொலி * மன்னர்
ஆணுடைச்சேனை நடுங்குமொலி * விண்ணுள்
ஏணுடைத்தேவர் வெளிப்பட்டவொலி * அப்பன்
காணுடைப்பாரதம் கையறைபோழ்தே.
3491 போழ்துமெலிந்த புன்செக்கரில் * வான்திசை
சூழுமெழுந்து உதிரப்புனலா * மலை
கீழ்துபிளந்த சிங்கமொத்ததால் * அப்பன்
ஆழ்துயர்செய்து அசுரரைக்கொல்லுமாறே.
3492 மாறுநிரைத்து இரைக்கும்சரங்கள் * இன
நூறுபிணம் மலைபோல்புரள * கடல்
ஆறுமடுத்து உதிரப்புனலா * அப்பன்
நீறுபட இலங்கைசெற்றநேரே.
3493 நேர்சரிந்தான் கொடிக்கோழிகொண்டான் * பின்னும்
நேர்சரிந்தான் எரியுமனலோன் * பின்னும்
நேர்சரிந்தான் முக்கண்மூர்த்திகண்டீர் * அப்பன்
நேர்சரிவாணன் திண்தோள்கொண்டவன்றே.
3494 அன்றுமண்நீரெரிகால் விண்மலைமுதல் *
அன்றுசுடர்இரண்டும்பிறவும் * பின்னும்
அன்றுமழையுயிர்தேவும்மற்றும் * அப்பன்
அன்றுமுதல் உலகம்செய்ததுமே.
3495 மேய்நிரைகீழ்புக மாபுரள * சுனை
வாய்நிறைநீர் பிளிறிச்சொரிய * இன
ஆநிரைபாடி அங்கேயொடுங்க * அப்பன்
தீமழைகாத்துக் குன்றமெடுத்தானே.
3496 குன்றமெடுத்தபிரான் அடியாரொடும் *
ஒன்றிநின்ற சடகோபனுரைசெயல் *
நன்றிபுனைந்த ஓராயிரத்துள்ளிவை *
வென்றிதரும்பத்தும் மேவிக்கற்பார்க்கே. (2)