Your browser does not support the audio element.
audio
2857 பிறவித்துயரற ஞானத்துள் நின்று *
துறவிச்சுடர்விளக்கம் தலைப்பெய்வார் *
அறவனை ஆழிப்படையந்தணனை *
மறவியையின்றி மனத்துவைப்பாரே. (2)
2858 வைப்பாம்மருந்தாம் அடியரை * வல்வினைத்
துப்பாம்புலனைந்தும் துஞ்சக்கொடானவன் *
எப்பால்யவர்க்கும் நலத்தாலுயர்ந்துயர்ந்து *
அப்பாலவன் எங்களாயர்கொழுந்தே.
2859 ஆயர்கொழுந்தாய் அவராற்புடையுண்ணும் *
மாயப்பிரானை என்மாணிக்கச்சோதியை *
தூயவமுதைப் பருகிப்பருகி * என்
மாயப்பிறவி மயர்வறுத்தேனே.
2860 மயர்வறவென்மனத்தே மன்னினான்தன்னை *
உயர்வினையேதரும் ஒண்சுடர்க்கற்றையை *
அயர்விலமரர்கள் ஆதிக்கொழுந்தை * என்
இசைவினை என்சொல்லியான்விடுவேனோ?
2861 விடுவேனோ? என்விளக்கை என்னாவியை *
நடுவேவந்து உய்யக்கொள்கின்றநாதனை *
தொடுவேசெய்து இளவாய்ச்சியர் கண்ணினுள் *
விடவேசெய்து விழிக்கும்பிரானையே.
2862 பிரான் பெருநிலங்கீண்டவன் * பின்னும்
விராய் மலர்த்துழாய்வேய்ந்தமுடியன் *
மராமரமெய்தமாயவன் * என்னுள்
இரானெனில் பின்னையானொட்டுவேனோ?
2863 யானொட்டியென்னுள் இருத்துவமென்றிலன் *
தானொட்டிவந்து என்தனிநெஞ்சைவஞ்சித்து *
ஊனொட்டிநின்று என்உயிரில்கலந்து * இயல்
வானொட்டுமோ? இனியென்னைநெகிழ்க்கவே.
2864 என்னைநெகிழ்க்கிலும் என்னுடைநன்னெஞ்சந்
தன்னை * அகல்விக்கத் தானும்கில்லானினி *
பின்னைநெடும்பணைத்தோள் மகிழ்பீடுடை *
முன்னையமரர் முழுமுதலானே.
2865 அமரர்முழுமுதல் ஆகியவாதியை *
அமரர்க்கமுதீந்த ஆயர்கொழுந்தை *
அமரவழும்பத் துழாவிஎன்னாவி *
அமரத்தழுவிற்று இனியகலுமோ?
2866 அகலிலகலும் அணுகிலணுகும் *
புகலுமரியன் பொருவல்லனெம்மான் *
நிகரிலவன்புகழ் பாடியிளைப்பிலம் *
பகலுமிரவும் படிந்துகுடைந்தே.
2867 குடைந்துவண்டுண்ணும் துழாய்முடியானை *
அடைந்த தென்குருகூர்ச்சடகோபன் *
மிடைந்தசொல்தொடை ஆயிரத்திப்பத்து *
உடைந்துநோய்களை ஓடுவிக்குமே. (2)