Your browser does not support the audio element.
audio
1798 அக்கும்புலியினதளும் உடையார்அவரொருவர் *
பக்கம்நிற்கநின்ற பண்பரூர்போலும் *
தக்கமரத்தின் தாழ்சினையேறி * தாய்வாயில்
கொக்கின்பிள்ளை வெள்ளிறவுண்ணும்குறுங்குடியே. (2)
1799 துங்காராரவத்திரைவந்துலவத் தொடுகடலுள் *
பொங்காரரவில்துயிலும் புனிதரூர்போலும் *
செங்காலன்னம் திகழ்தண்பணையில்பெடையோடும் *
கொங்கார்கமலத்தலரில்சேரும்குறுங்குடியே.
1800 வாழக்கண்டோம்வந்துகாண்மின்தொண்டீர்காள்! *
கேழல் செங்கண்மாமுகில்வண்ணர்மருவுமூர் *
ஏழைச்செங்கால் இன்துணைநாரைக்குஇரைதேடி *
கூழைப்பார்வைக் கார்வயல்மேயும்குறுங்குடியே.
1801 சிரமுனைந்துமைந்தும் சிந்தச்சென்று * அரக்கன்
உரமும்கரமும்துணித்த உரவோனூர்போலும் *
இரவும்பகலும் ஈன்தேன் முரல * மன்றெல்லாம்
குரவின்பூவேதான் மணம்நாறும்குறுங்குடியே.
1802 கவ்வைக்களிற்றுமன்னர்மாளக் கலிமான்தேர்
ஐவர்க்காய் * அன்றுஅமரில் உய்த்தான்ஊர்போலும் *
மைவைத்திலங்குகண்ணார்தங்கள் மொழியொப்பான் *
கொவ்வைக்கனிவாய்க் கிள்ளைபேசும்குறுங்குடியே.
1803 தீநீர்வண்ணமாமலர்கொண்டுவிரையேந்தி *
தூநீர்பரவித் தொழுமின்எழுமின்தொண்டீர்காள்! *
மாநீர்வண்ணர் மருவியுறையுமிடம் * வானில்
கூனீர்மதியை மாடம்தீண்டும்குறுங்குடியே.
1804 வல்லிச் சிறுநுண்ணிடையாரிடை நீர்வைக்கின்ற *
அல்லல்சிந்தைதவிர அடைமின் அடியீர்காள்! *
சொல்லில்திருவேயனையார் கனிவாயெயிறொப்பான் *
கொல்லைமுல்லை மெல்லரும்பீனும்குறுங்குடியே.
1805 நாராரிண்டை நாண்மலர்கொண்டுநம்தமர்காள்! *
ஆராஅன்போடு எம்பெருமானூரடைமின்கள் *
தாராவாரும் வார்புனல்மேய்ந்துவயல்வாழும் *
கூர்வாய்நாரை பேடையொடாடும்குறுங்குடியே.
1806 நின்றவினையும்துயரும்கெட மாமலரேந்தி *
சென்றுபணிமின்எழுமின் தொழுமின்தொண்டீர்காள்! *
என்றும்இரவும்பகலும் வரிவண்டுஇசைபாட *
குன்றின்முல்லை மன்றிடைநாறும்குறுங்குடியே.
1807 சிலையால்இலங்கைசெற்றான் மற்றோர்சினவேழம் *
கொலையார்கொம்புகொண்டான்மேய குறுங்குடிமேல் *
கலையார்பனுவல்வல்லான் கலியனொலிமாலை *
நிலையார்பாடல்பாடப் பாவம்நில்லாவே. (2)