Chapter 5

Thirukkannapuram 5 - (தந்தை காலில்)

திருக்கண்ணபுரம் 5
Thirukkannapuram 5 - (தந்தை காலில்)
The verses in this section are structured as if the heroine, unable to receive the divine grace of the hero, Sowriraja Perumal, is emaciated and lamenting in longing. These verses express the inner turmoil and sorrow of the heroine as she pines and laments her separation during the late evening, depicting her yearning and distress in the Akam (inner) genre of classical Tamil poetry.
தலைமகனாகிய சவுரிராஜப் பெருமாளின் திருவருள் கிடைக்கப்பெறாத தலைவி இளைத்து ஏங்கிப் புலம்புதல் போல் இப்பாசுரங்கள் அமைத்துள்ளன. அந்திமாலைப் பொழுதில் தனித்திருக்கும் தலைவி தன் ஏக்கத்தைப் புலப்படுத்தும் அகப் பொருள் துறை இப்பகுதி
Verses: 1688 to 1697
Grammar: Aṟuchīr Āsiriya Viruththam / அறுசீராசிரியவிருத்தம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and be with the Gods
  • PT 8.5.1
    1688 ## தந்தை காலில் விலங்கு அற * வந்து தோன்றிய
    தோன்றல் பின் * தமியேன் தன்
    சிந்தை போயிற்றுத் * திருவருள் அவனிடைப்
    பெறும் அளவு இருந்தேனை **
    அந்திகாவலன் அமுது உறு பசுங் கதிர் *
    அவை சுட அதனோடும் *
    மந்தமாருதம் வன முலை தடவந்து *
    வலிசெய்வது ஒழியாதே 1
  • PT 8.5.2
    1689 மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன் *
    வரை புரை திருமார்வில் *
    தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் *
    தாழ்ந்தது ஓர் துணை காணேன் **
    ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது *
    ஒளியவன் விசும்பு இயங்கும் *
    தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன *
    செய்வது ஒன்று அறியேனே 2
  • PT 8.5.3
    1690 ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் *
    வளைகளும் இறை நில்லா *
    பேயின் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை * நம்
    பெண் உயிர்க்கு இரங்குமோ? **
    தூய மா மதிக் கதிர் சுட துணை இல்லை *
    இணை முலை வேகின்றதால் *
    ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் *
    அஞ்சேல் என்பார் இலையே 3
  • PT 8.5.4
    1691 கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெம்திறல் *
    கழல் மன்னர் பெரும் போரில் *
    மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் *
    வந்திலன் மறி கடல் நீர் **
    தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் *
    தழல் முகந்து இள முலைமேல் *
    இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை *
    எனக்கு எனப் பெறலாமே 4
  • PT 8.5.5
    1692 ஏழு மா மரம் துளைபடச் சிலை வளைத்து *
    இலங்கையை மலங்குவித்த
    ஆழியான் * நமக்கு அருளிய அருளொடும் *
    பகல் எல்லை கழிகின்றதால் **
    தோழி நாம் இதற்கு என் செய்தும்? துணை இல்லை *
    சுடர் படு முதுநீரில் *
    ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவது ஓர் *
    அந்தி வந்து அடைகின்றதே 5
  • PT 8.5.6
    1693 முரியும் வெண் திரை முது கயம் தீப்பட *
    முழங்கு அழல் எரி அம்பின் *
    வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும் *
    வந்திலன் என் செய்கேன்? **
    எரியும் வெம் கதிர் துயின்றது * பாவியேன்
    இணை நெடுங் கண் துயிலா *
    கரிய நாழிகை ஊழியின் பெரியன *
    கழியும் ஆறு அறியேனே 6
  • PT 8.5.7
    1694 கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து * இலங்கையர்
    கோனது வரை ஆகம்
    மலங்க * வெம் சமத்து அடு சரம் துரந்த * எம்
    அடிகளும் வாரானால் **
    இலங்கு வெம் கதிர் இள மதி அதனொடும் *
    விடை மணி அடும் * ஆயன்
    விலங்கல் வேயினது ஓசையும் ஆய் * இனி
    விளைவது ஒன்று அறியேனே 7
  • PT 8.5.8
    1695 முழுது இவ் வையகம் முறை கெட மறைதலும் *
    முனிவனும் முனிவு எய்தி *
    மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய *
    மைந்தனும் வாரானால் **
    ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை *
    அடங்க அம் சிறை கோலி *
    தழுவும் நள் இருள் தனிமையின் கடியது ஓர் *
    கொடு வினை அறியேனே 8
  • PT 8.5.9
    1696 கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும் *
    கனவினில் அவன் தந்த *
    மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி * என்
    வளை நெக இருந்தேனை **
    சினம் செய் மால் விடைச் சிறு மணி ஓசை * என்
    சிந்தையைச் சிந்துவிக்கும் *
    அனந்தல் அன்றிலின் அரி குரல் * பாவியேன்
    ஆவியை அடுகின்றதே 9
  • PT 8.5.10
    1697 ## வார் கொள் மென் முலை மடந்தையர் *
    தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து, *
    ஆர்வத்தால் அவர் புலம்பிய
    புலம்பலை * அறிந்து முன் உரை செய்த, **
    கார் கொள் பைம் பொழில் மங்கையர்
    காவலன் * கலிகன்றி யொலி வல்லார், *
    ஏர்கொள் வைகுந்த மாநகர்
    புக்கு * இமையரோடும் கூடுவரே 10