Your browser does not support the audio element.
audio
1668 கரையெடுத்தசுரிசங்கும் கனபவளத்தெழுகொடியும் *
திரையெடுத்துவருபுனல்சூழ் திருக்கண்ணபுரத்துறையும் *
விரையெடுத்ததுழாயலங்கல் விறல்வரைத்தோள்புடைபெயர *
வரையெடுத்தபெருமானுக்கு இழந்தேன்என்வரிவளையே. (2)
1669 அரிவிரவுமுகிற்கணத்தால் அகிற்புகையால்வரையோடும் *
தெரிவரியமணிமாடத் திருக்கண்ணபுரத்துறையும் *
வரியரவினணைத்துயின்று மழைமதத்தசிறுதறுகண் *
கரிவெருவமருப்பொசித்தாற்கு இழந்தேனென்கனவளையே.
1670 துங்கமாமணிமாட நெடுமுகட்டின்சூலிகை * போம்
திங்கள்மாமுகில்துணிக்கும் திருக்கண்ணபுரத்துறையும் *
பைங்கண்மால்விடையடர்த்துப் பனிமதிகோள்விடுத்துகந்த *
செங்கண்மாலம்மானுக்கு இழந்தேனென்செறிவளையே.
1671 கணமருவுமயிலகவு கடிபொழில்சூழ்நெடுமறுகில் *
திணமருவுகனமதிள்சூழ் திருக்கண்ணபுரத்துறையும் *
மணமருவுதோளாய்ச்சி ஆர்க்கப்போய் * உரலோடும்
புணர்மருதம்இறநடந்தாற்குஇழந்தேன்என்பொன்வளையே.
1672 வாயெடுத்தமந்திரத்தால் அந்தணர்தம்செய்தொழில்கள் *
தீயெடுத்துமறைவளர்க்கும் திருக்கண்ணபுரத்துறையும் *
தாயெடுத்தசிறுகோலுக்கு உளைந்தோடி * தயிருண்ட
வாய்துடைத்தமைந்தனுக்கு இழந்தேன்என்வரிவளையே.
1673 மடலெடுத்தநெடுந்தாழை மருங்கெல்லாம்வளர்பவளம் *
திடலெடுத்துச்சுடரிமைக்கும் திருக்கண்ணபுரத்துறையும் *
அடலடர்த்தன்றிரணியனை முரணழிய, அணியுகிரால் *
உடலெடுத்தபெருமானுக்கு இழந்தேன்என்னொளிவளையே.
1674 வண்டமரும்மலர்ப்புன்னை வரிநீழல்அணிமுத்தம் *
தெண்திரைகள்வரத்திரட்டும் திருக்கண்ணபுரத்துறையும் *
எண்திசையும்எழுசுடரும் இருநிலனும்பெருவிசும்பும் *
உண்டுமிழ்ந்தபெருமானுக்கு இழந்தேன்என்னொளிவளையே.
1675 கொங்குமலிகருங்குவளைகண்ணாகத் * தெண்கயங்கள்
செங்கமலமுகமலர்த்தும் திருக்கண்ணபுரத்துறையும் *
வங்கமலிதடங்கடலுள் வரியரவினணைத்துயின்ற *
செங்கமலநாபனுக்கு இழந்தேன்என்செறிவளையே.
1676 வாராளும்இளங்கொங்கை நெடும்பணைத்தோள்மடப்பாவை *
சீராளும்வரைமார்பன் திருக்கண்ணபுரத்துறையும் *
பேராளன்ஆயிரம்பேர் ஆயிரவாயரவணைமேல் *
பேராளர்பெருமானுக்கு இழந்தேன்என்பெய்வளையே.
1677 தேமருவுபொழில்புடைசூழ் திருக்கண்ணபுரத்துறையும்
வாமனனை * மறிகடல்சூழ் வயலாலிவளநாடன் *
காமருசீர்க்கலிகன்றி கண்டுரைத்ததமிழ்மாலை *
நாமருவிஇவைபாட வினையாயநண்ணாவே. (2)