Chapter 3
Thirunaraiyur 10 - (சின இல்)
Having seen Thirunaraiyur Nambi in his dream and feeling immense joy, the āzhvār sings, describing the state of never being able to forget the Lord.
நறையூர் நம்பியைக் கனவில் கண்குளிரக் கண்டு மகிழ்ந்த ஆழ்வார், அப்பெருமானைத் தாம் என்றும் மறக்கமுடியாத நிலையை விளக்கி ஈண்டுப் பாடியுள்ளார்.
Verses: 1568 to 1577
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will not get affected by the results of karma
- PT 7.3.1
1568 ## சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச் *
செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம்
மனமுள் கொண்டு * என்றும் எப்போதும் நின்று ஏத்தும்
மா முனியை * மரம் ஏழ் எய்த மைந்தனை **
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை *
நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியை *
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் * என்
கண் இணைகள் களிப்பக் களித்தேனே 1 - PT 7.3.2
1569 தாய் நினைந்த கன்றே ஒக்க * என்னையும்
தன்னையே நினைக்கச் செய்து * தான் எனக்கு
ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை *
அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை ** மகரக் குழைக் காதனை *
மைந்தனை மதிள் கோவல் இடைகழி
ஆயனை * அமரர்க்கு அரி ஏற்றை * என்
அன்பனை அன்றி ஆதரியேனே 2 - PT 7.3.3
1570 வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் *
மற்று ஓர் நெஞ்சு அறியான் * அடியேனுடைச்
சிந்தை ஆய் வந்து * தென்புலர்க்கு என்னைச்
சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன் **
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்
கோவினை * குடம் ஆடிய கூத்தனை *
எந்தையை எந்தை தந்தை தம்மானை *
எம்பிரானை எத்தால் மறக்கேனே? 3 - PT 7.3.4
1571 உரங்களால் இயன்ற மன்னர் மாளப் *
பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று *
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்
எம்பிரானை * வம்பு ஆர் புனல் காவிரி **
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி *
ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று *
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு
அன்றி * என் மனம் தாழ்ந்து நில்லாதே 4 - PT 7.3.5
1572 ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது *
அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு * தாமரை அன்ன பொன் ஆர் அடி
எம்பிரானை * உம்பர்க்கு அணி ஆய் நின்ற **
வேங்கடத்து அரியை பரி கீறியை *
வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங் கரும்பினை * தேனை நன் பாலினை
அன்றி * என் மனம் சிந்தை செய்யாதே 5 - PT 7.3.6
1573 எள் தனைப்பொழுது ஆகிலும் * என்றும்
என் மனத்து அகலாது இருக்கும் புகழ் *
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின் *
தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
கட்டியை ** கரும்பு ஈன்ற இன் சாற்றை *
காதலால் மறை நான்கும் முன் ஓதிய
பட்டனை * பரவைத் துயில் ஏற்றை * என்
பண்பனை அன்றிப் பாடல் செய்யேனே 6 - PT 7.3.7
1574 பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற *
பாலை ஆகி இங்கே புகுந்து * என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் *
கொண்ட பின் மறையோர் மனம் தன் உள் **
விண் உளார் பெருமானை எம்மானை *
வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் * மா மணி வண்ணன் எம் அண்ணல் *
வண்ணமே அன்றி வாய் உரையாதே 7 - PT 7.3.8
1575 இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் * எமக்கு
இம்மையே அருள்பெற்றமையால் * அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர் *
தோற்றத் தொல் நெறியை ** வையம் தொழப்படும்
முனியை வானவரால் வணங்கப்படும்
முத்தினை * பத்தர் தாம் நுகர்கின்றது ஓர்
கனியை * காதல் செய்து என் உள்ளம் கொண்ட
கள்வனை * இன்று கண்டுகொண்டேனே 8 - PT 7.3.9
1576 என் செய்கேன் அடியேன் உரையீர் * இதற்கு
என்றும் என் மனத்தே இருக்கும் புகழ் *
தஞ்சை ஆளியைப் பொன்பெயரோன் * நெஞ்சம்
அன்று இடந்தவனை தழலே புரை **
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட *
சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் *
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை
அன்றி * என் மனம் போற்றி என்னாதே 9 - PT 7.3.10
1577 ## தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர் *
தோன்றல் வாள் கலியன் * திரு ஆலி
நாடன் * நல் நறையூர் நின்ற நம்பி தன் **
நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில் *
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் *
தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல் மாலை *
பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்
பாட * நும்மிடைப் பாவம் நில்லாவே 10