Your browser does not support the audio element.
audio
1548 கறவாமடநாகுதன் கன்றுஉள்ளினாற்போல் *
மறவாதுஅடியேன் உன்னையே அழைக்கின்றேன் *
நறவார்பொழில்சூழ் நறையூர்நின்றநம்பி! *
பிறவாமைஎனைப்பணி எந்தைபிரானே! (2)
1549 வற்றாமுதுநீரொடு மால்வரையேழும் *
துற்றாமுன்துற்றிய தொல்புகழோனே! *
அற்றேன்அடியேன் உன்னையேஅழைக்கின்றேன் *
பெற்றேன்அருள்தந்திடு என்எந்தைபிரானே!
1550 தாரேன்பிறர்க்கு உன்னருள்என்னிடைவைத்தாய் *
ஆரேன் அதுவேபருகிக்களிக்கின்றேன் *
காரேய்கடலேமலையே திருக்கோட்டி
யூரே * உகந்தாயை உகந்தடியேனே.
1551 புள்வாய்பிளந்த புனிதா! என்றுஅழைக்க *
உள்ளேநின்று என்னுள்ளம்குளிரும்ஒருவா! *
கள்வா! கடன்மல்லைக்கிடந்தகரும்பே! *
வள்ளால்! உன்னை எங்ஙனம்நான்மறக்கேனே?
1552 வில்லேர்நுதல் வேல்நெடுங்கண்ணியும்நீயும் *
கல்லார்கடுங்கானம் திரிந்தகளிறே! *
நல்லாய்! நரநாரணனே! எங்கள்நம்பி! *
சொல்லாய்உன்னை யான்வணங்கித்தொழுமாறே.
1553 பனியேய்பரங்குன்றின் பவளத்திரளே! *
முனியே! திருமூழிக்களத்துவிளக்கே! *
இனியாய்தொண்டரோம் பருகுஇன்னமுதாய
கனியே! * உன்னைக்கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
1554 கதியேலில்லை நின்னருளல்லதுஎனக்கு *
நிதியே! திருநீர்மலைநித்திலத்தொத்தே! *
பதியே! பரவித்தொழும் தொண்டர்தமக்குக்
கதியே! * உனைக்கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
1555 அத்தா! அரியே! என்று உன்னை அழைக்க *
பித்தாவென்றுபேசுகின்றார் பிறர்என்னை *
முத்தே! மணிமாணிக்கமே! முளைக்கின்ற
வித்தே! உன்னைஎங்ஙனம்நான்விடுகேனே!
1556 தூயாய்! சுடர்மாமதிபோல்உயிர்க்கெல்லாம் *
தாயாயளிக்கின்ற தண்தாமரைக்கண்ணா *
ஆயா! அலைநீருலகேழும் முன்னுண்ட
வாயா! * உனைஎங்ஙனம் நான்மறக்கேனே?
1557 வண்டார்பொழில்சூழ் நறையூர்நம்பிக்கு * என்றும்
தொண்டாய்கலியன் ஒலிசெய்தமிழ்மாலை *
தொண்டீர்! இவைபாடுமின் பாடிநின்றாட *
உண்டேவிசும்பு உந்தமக்கு இல்லைதுயரே (2)