Your browser does not support the audio element.
audio
1468 துறப்பேனல்லேன் இன்பம், துறவாது * நின்னுருவம்
மறப்பேனல்லேன் என்றும்மறவாது * யான்உலகில்
பிறப்பேனாகஎண்ணேன் பிறவாமைபெற்றது * நின்
திறத்தேனாதன்மையால் திருவிண்ணகரானே! (2)
1469 துறந்தேன் ஆர்வச்செற்றச்சுற்றம் துறந்தமையால் *
சிறந்தேன்நின்னடிக்கே அடிமை திருமாலே! *
அறந்தானாய்த்திரிவாய்! உன்னைஎன்மனத்தகத்தே *
திறம்பாமல்கொண்டேன் திருவிண்ணகரானே!
1470 மானேய்நோக்குநல்லார் மதிபோல்முகத்துஉலவும் *
ஊனேய்கண்வாளிக்கு உடைந்தோட்டந்துஉன்னடைந்தேன் *
கோனே! குறுங்குடியுள்குழகா! திருநறையூர்த்
தேனே! * வருபுனல்சூழ் திருவிண்ணகரானே!
1471 சாந்தேந்துமென்முலையார் தடந்தோள்புணரின்பவெள்ளத்து
ஆழ்ந்தேன் * அருநகரத்தழுந்தும் பயன்படைத்தேன் *
போந்தேன்புண்ணியனே! உனையெய்தியென் தீவினைகள்
தீர்ந்தேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகரானே!
1472 மற்றோர்தெய்வம்எண்ணேன் உன்னைஎன்மனத்துவைத்துப்
பெற்றேன் * பெற்றதுவும்பிறவாமை எம்பெருமான்! *
வற்றாநீள்கடல்சூழ்இலங்கையிராவணனைச்
செற்றாய் * கொற்றவனே! திருவிண்ணகரானே!
1473 மையொண்கருங்கடலும் நிலனும்மணிவரையும் *
செய்யசுடரிரண்டும் இவையாயநின்னை * நெஞ்சில்
உய்யும்வகையுணர்ந்தேன் உண்மையால் இனி * யாதுமற்றோர்
தெய்வம்பிறிதறியேன் திருவிண்ணகரானே!
1474 வேறேகூறுவதுண்டு அடியேன்விரித்துரைக்கு
மாறே * நீபணியாதுஅடை நின்திருமனத்து *
கூறேன்நெஞ்சுதன்னால் குணங்கொண்டு * மற்றோர்தெய்வம்
தேறேன்உன்னையல்லால் திருவிண்ணகரானே!
1475 முளிந்தீந்தவெங்கடத்து மூரிப்பெருங்களிற்றால் *
விளிந்தீந்தமாமரம்போல் வீழ்ந்தாரைநினையாதே *
அளிந்தோர்ந்தசிந்தை நின்பால்அடியேற்கு * வானுலகம்
தெளிந்தேஎன்றுஎய்துவது? திருவிண்ணகரானே!
1476 சொல்லாய்திருமார்வா! உனக்காகித்தொண்டுபட்ட
நல்லேனை * வினைகள்நலியாமை நம்புநம்பீ *
மல்லா! குடமாடி! மதுசூதனே! * உலகில்
செல்லாநல்லிசையாய்! திருவிண்ணகரானே!
1477 தாரார்மலர்க்கமலத் தடம்சூழ்ந்ததண்புறவில் *
சீரார்நெடுமறுகில் திருவிண்ணகரானை *
காரார்புயல்தடக்கைக் கலியனொலிமாலை *
ஆரார்இவைவல்லார் அவர்க்குஅல்லல்நில்லாவே. (2)