Your browser does not support the audio element.
audio
1458 பொறுத்தேன்புன்சொல்நெஞ்சில் பொருளின்பமெனஇரண்டும்
இறுத்தேன் * ஐம்புலன்கட்கடனாயின வாயிலொட்டி
அறுத்தேன் * ஆர்வச்செற்றமவை தன்மைமனத்தகற்றி
வெறுத்தேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே! (2)
1459 மறந்தேன்உன்னைமுன்னம் மறந்தமதியின்மனத்தால் *
இறந்தேன்எத்தனையும் அதனால்இடும்பைக்குழியில் *
பிறந்தேஎய்த்தொழிந்தேன் பெருமானே! திருமார்பா! *
சிறந்தேன்நின்னடிக்கே திருவிண்ணகர்மேயவனே!
1460 மானேய்நோக்கியர்தம் வயிற்றுக்குழியிலுழைக்கும் *
ஊனேயாக்கைதன்னை உதவாமைஉணர்ந்துணர்ந்து *
வானே! மாநிலமே! வந்துவந்துஎன்மனத்திருந்த
தேனே! * நின்னடைந்தேன் திருவிண்ண்ணகர்மேயவனே!
1461 பிறிந்தேன்பெற்றமக்கள்பெண்டிரென்றிவர் பின்னுதவாது
அறிந்தேன் * நீபணித்தஅருளென்னும் ஓள்வாளுருவி
எறிந்தேன் * ஐம்புலன்கள்இடர்தீரஎறிந்துவந்து
செறிந்தேன் * நின்னடிக்கே திருவிண்ணகர்மேயவனே!
1462 பாண்தேன்வண்டறையும்குழலார்கள் பல்லாண்டிசைப்ப *
ஆண்டார்வையமெல்லாம் அரசாகி * முன்னாண்டவரே
மாண்டாரென்றுவந்தார் அந்தோ மனைவாழ்க்கைதன்னை
வேண்டேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகர்மேயவனே!
1463 கல்லாஐம்புலன்களவை கண்டவாறுசெய்யகில்லேன் *
மல்லா! மல்லமருள்மல்லர்மாள மல்லடர்த்த
மல்லா! * மல்லலம்சீர் மதிள்நீரிலங்கையழித்த
வில்லா! * நின்னடைந்தேன் திருவிண்ணகர்மேயவனே!
1464 வேறாயானிரந்தேன் வெகுளாதுமனக்கொள்எந்தாய்! *
ஆறாவெந்நரகத்து அடியேனையிடக்கருதி *
கூறாஐவர்வந்து குமைக்கக்குடிவிட்டவரை *
தேறாதுஉன்னடைந்தேன் திருவிண்ணகர்மேயவனே!
1465 தீவாய்வல்வினையார் உடநின்று சிறந்தவர்போல் *
மேவாவெந்நரகத்து இடஉற்றுவிரைந்துவந்தார் *
மூவாவானவர்தம்முதல்வா! மதிகோள்விடுத்த
தேவா! * நின்னடைந்தேன் திருவிண்ணகர்மேயவனே!
1466 போதார்தாமரையாள் புலவிக்குலவானவர்தம்
கோதா! * கோதில்செங்கோல் குடைமன்னரிடைநடந்த
தூதா! * தூமொழியாய்! சுடர்போலென்மனத்திருந்த
வேதா! * நின்னடைந்தேன் திரு விண்ணகர்மேயவனே!
1467 தேனார்பூம்புறவில் திருவிண்ணகர்மேயவனை *
வானாரும்மதிள்சூழ் வயல்மங்கையர்கோன் * மருவார்
ஊனார்வேல்கலியன் ஒலிசெய்தமிழ்மாலைவல்லார் *
கோனாய். வானவர்தம் கொடிமாநகர்கூடுவரே. (2)