Your browser does not support the audio element.
audio
1198 தூவிரியமலருழக்கித் துணையோடும்பிரியாதே *
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே *
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி *
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே. (2)
1199 பிணியவிழும்நறுநீல மலர்கிழியப்பெடையோடும் *
அணிமலர்மேல்மதுநுகரும் அறுகாலசிறுவண்டே! *
மணிகெழுநீர்மருங்கலரும் வயலாலிமணவாளன் *
பணியறியேன், நீசென்று என்பயலைநோய்உரையாயே.
1200 நீர்வானம் மண்எரிகாலாய்நின்ற நெடுமால் * தன்
தாராயநறுந்துளவம் பெறுந்தகையேற்குஅருளானே! *
சீராரும்வளர்பொழில்சூழ் திருவாலிவயல்வாழும் *
கூர்வாயசிறுகுருகே! குறிப்பறிந்துகூறாயே.
1201 தானாகநினையானேல் தன்னினைந்துநைவேற்கு * ஓர்
மீனாயகொடிநெடுவேள் வலிசெய்யமெலிவேனோ?
தேன்வாயவரிவண்டே! திருவாலிநகராளும் *
ஆனாயற்குஎன்னுறுநோய் அறியச்சென்றுரையாயே.
1202 வாளாயகண்பனிப்பமென்முலைகள்பொன்அரும்ப *
நாணாளும்நின்நினைந்துநைவேற்கு * ஓ! மண்ணளந்த
தாளாளா! தண்குடந்தைநகராளா! வரையெடுத்த
தோளாளா! * என்தனக்கு ஓர் துணையாளனாகாயே!
1203 தாராய தண்துளவ வண்டுழுதவரைமார்பன் *
போரானைக்கொம்புஒசித்த புட்பாகன்என்னம்மான் *
தேராரும்நெடுவீதித் திருவாலிநகராளும் *
காராயன், என்னுடைய கனவளையும்கவர்வானோ.
1204 கொண்டுஅரவத்திரையுலவுகுரைகடல்மேல், குலவரைபோல் *
பண்டு அரவினணைக்கிடந்து பாரளந்தபண்பாளா! *
வண்டுஅமரும்வளர்ப்பொழில்சூழ்வயலாலிமைந்தா! * என்
கண்துயில்நீகொண்டாய்க்கு என்கனவளையும் கடவேனோ!
1205 குயிலாலும்வளர்பொழில்சூழ் தண்குடந்தைக் குடமாடீ! *
துயிலாதகண்ணிணையேன் நின்நினைந்து துயர்வேனோ! *
முயலாலும்இளமதிக்கே வளையிழந்தேற்கு * இதுநடுவே
வயலாலிமணவாளா! கொள்வாயோமணிநிறமே! (2)
1206 நிலையாளா! நின்வணங்க வேண்டாயேயாகிலும் * என்
முலையாள ஒருநாள் உன்அகலத்தால் ஆளாயே? *
சிலையாளா! மரமெய்ததிறலாளா! திருமெய்ய
மலையாளா! * நீயாள வளையாளமாட்டோமே.
1207 மையிலங்குகருங்குவளை மருங்கலரும்வயலாலி *
நெய்யிலங்குசுடராழிப்படையானை நெடுமாலை *
கையிலங்குவேல்கலியன் கண்டுரைத்ததமிழ்மாலை *
ஐயிரண்டும்இவைவல்லார்க்கு அருவினைகள் அடையாவே. (2)