Your browser does not support the audio element.
audio
1188 வந்துஉனதடியேன்மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும் * என்
சிந்தனைக்குஇனியாய்! திருவே! என்னாருயிரே! *
அந்தளிரணியாரசோகின் இளந்தளிர்கள்கலந்து * அவையெங்கும்
செந்தழல்புரையும் திருவாலியம்மானே! (2)
1189 நீலத்தடவரை மாமணிநிகழக்கிடந்ததுபோல் * அரவணை
வேலைத்தலைக்கிடந்தாய்! அடியேன்மனத்துஇருந்தாய் *
சோலைத்தலைக்கணமாமயில்நடமாட மழைமுகில் போன்றெழுந்து * எங்கும்
ஆலைப்புகைகமழும் அணியாலியம்மானே!
1190 நென்னல்போய்வருமென்றென்று எண்ணியிராமை என்மனத்தேபுகுந்தது *
இம்மைக்கென்றுஇருந்தேன் எறிநீர்வளஞ்செறுவில் *
செந்நெற்கூழைவரம்பொரீஇ அரிவார்முகத் தெழுவாளைபோய் * கரும்பு
அந்நற்காடுஅணையும் அணியாலியம்மானே!
1191 மின்னில்மன்னுநுடங்கிடை மடவார்தம்சிந்தைமறந்து வந்து * நின்
மன்னுசேவடிக்கே மறவாமை வைத்தாயால் *
புன்னைமன்னுசெருந்தி வண்பொழில்வாய்அகன்பணைகள் கலந்து * எங்கும்
அன்னம்மன்னும்வயல் அணியாலியம்மானே!
1192 நீடுபல்மலர்மாலையிட்டு நின்னிணையடிதொழுதேத்தும் * என்மனம்
வாடநீநினையேல் மரமெய்தமாமுனிவா! *
பாடலின்ஒலிசங்கினோசைபரந்து பல்பணையால்மலிந்து * எங்கும்
ஆடலோசையறா அணியாலியம்மானே!
1193 கந்தமாமலரெட்டும்இட்டு நின்காமர்சேவடி கைதொழுதெழும் *
புந்தியேன்மனத்தே புகுந்தாயைப்போகலொட்டேன் *
சந்திவேள்விசடங்குநான்மறை ஓதிஓதுவித்துஆதியாய் வரும் *
அந்தணாளரறா அணியாலியம்மானே!
1194 உலவுதிரைக்கடல்பள்ளிகொண்டுவந்துஉன்னடியேன் மனம்புகுந்த * அப்
புலவ!புண்ணியனே! புகுந்தாயைப்போகலொட்டேன் *
நிலவுமலர்ப்புன்னைநாழல்நீழல் தண்தாமரை மலரின்மிசை * மலி
அலவன்கண்படுக்கும் அணியாலியம்மானே!
1195 சங்குதங்குதடங்கடல் கடன்மல்லையுள்கிடந்தாய்! * அருள்புரிந்து
இங்குஎன்னுள்புகுந்தாய்! இனிப்போயினால்அறையோ! *
கொங்குசெண்பகமல்லிகைமலர்புல்கி இன்னிளவண்டு போய் *
இளந்தெங்கின்தாதளையும் திருவாலியம்மானே!
1196 ஓதியாயிரநாமமும்பணிந்தேத்தி நின்அடைந்தேற்கு * ஒருபொருள்
வேதியா! அரையா! உரையாய்ஒருமாற்றம், எந்தாய்! *
நீதியாகியவேதமாமுனியாளர் தோற்றம்உரைத்து * மற்றவர்க்கு
ஆதியாயிருந்தாய்! அணியாலியம்மானே!
1197 புல்லிவண்டறையும்பொழில்புடைசூழ்தென்னாலி யிருந்தமாயனை *
கல்லின்மன்னுதிண்தோள் கலியன்ஒலிசெய்த *
நல்லஇன்னிசைமாலை நாலுமோரைந்துமொன்றும் நவின்று * தாம்உடன்
வல்லராயுரைப்பார்க்கு இடமாகும்வானுலகே. (2)